வியாழன், அக்டோபர் 27, 2011

தற்கொலைக்கு தூண்டும் ஐ.பி:முஸ்லிம் பெண்ணை வேட்டையாடும் கேரள போலீஸ்

’தேசத்துரோகியான மகளின் தாயாரான உங்களுக்கு குழந்தைகளுக்கு விஷத்தைக்கொடுத்துவிட்டு தற்கொலைச்செய்யக்கூடாதா?’ என ஒரு ஐ.பி அதிகாரி தன்னை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக ஷைனாவின் தாயார் நஃபீஸா கூறுகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக போலீசாரின் அட்டூழியத்தால் அனுபவித்துவரும் உள்ளத்தை கலங்கச்செய்யும் துயரங்களை தேஜஸ் நிருபருடன் பகிர்ந்துக்கொண்டார் நஃபீஸா.

யார் இந்த ஷைனா?-சட்டத்தில் பட்டம் பெற்றவர்தாம் ஷைனா. பெரிங்கோட்டுக்கரா என்ற இடத்தைச்சார்ந்தவரும், தொழிலாளர் யூனியன் உறுப்பினருமான ருபேஷை ஷைனா திருமணம் செய்ததைத்தொடர்ந்து அவரது வாழ்வில் அமைதி காணாமல் போனது.

ருபேஷிற்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும், இதில் ஷைனாவுக்கும் பங்குண்டு என குற்றம்சாட்டி இவர்களை போலீஸ் வேட்டையாடி வருகிறது.இவர்கள் இருவரும் தற்பொழுது தலைமறைவாக உள்ளனர். 2007 ஆம் ஆண்டு நந்திக்கிராமில் வாழ்ந்த மக்களை அவர்களின் இருப்பிடங்களிலிருந்து சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்காக வெளியேற்றிய நடவடிக்கைக்கு எதிராக பிரச்சாரம் நடத்திய குழுவினருக்கு உதவினார் என குற்றம் சாட்டி நள்ளிரவில் ஒரு மணிக்கு வீடு புகுந்து ஷைனாவும் அவரது குழந்தைகளும் கைதுச்செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீப்பிள் மார்ச் பத்திரிகையின் எடிட்டர் கோவிந்தன் குட்டியை சந்திக்க சென்ற குழுவினருடன் சென்றபோதும் கைதுச்செய்வதாக மிரட்டப்பட்டார் ஷைனா. நிலம்பூரில் ரெயில் கவிழ்ப்பு சம்பவத்தின் பெயரிலும் ருபேஷிற்கு கைது மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஷைனாவின் வீட்டில் போலீஸார் கதவை உடைத்துவிட்டு அத்துமீறி நுழைந்து கம்ப்யூட்டர், டிஜிட்டல் கேமரா, சி.டிக்கள் ஆகியவற்றை எடுத்துவிட்டு வீட்டை புதிய பூட்டைப்போட்டு பூட்டிவிட்டுச்சென்றுள்ளனர். பின்னர் ஷைனாவின் தாயார் நஃபீஸா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வீட்டு சாவியை மீட்டுள்ளார்.

பின்னர் கடைசியாக கடந்த மே மாதம் 31-ஆம் தேதி வீட்டிலிருந்து வாங்கிச்சென்ற குடையை திருப்பி அளிக்க வந்த இளைஞருடன் வந்த போலீஸ் வீட்டின் வாசலை உடைத்து பரிசோதனை நடத்தி பல பொருட்களையும் எடுத்துச்சென்றுள்ளனர்.இப்பகுதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரனும், போலீஸ்காரர் அபிலாஷும் ஷைனாவின் மகளிடம் மோசமான வார்த்தைகளால் பேசியுள்ளனர். ஷைனாவின் புகாரில் உண்மை நிலவரத்தை கண்டறிய வந்த க்ரோ வாசு என்ற மனித உரிமை ஆர்வலரின் தலைமையில் வந்த குழுவினரை போலீஸ் முதலில் தடுத்துள்ளது.

மேலும் போலீஸ் அட்டூழியத்தை குறித்து விபரம் அறிய வந்த ஃபேஸ்புக் குழுவினரையும் போலீஸ் கைதுச்செய்துள்ளது. அரச பயங்கரவாதம் வெளியே தெரியாமலிருக்க போலீஸ் அஞ்சுகிறது என்பதன் நிதர்சனம்தான் இச்சம்பவங்கள்.

வலப்பாடு ஷைனா மன்சில் என்ற வீட்டில் தனது பேத்திகளுடன் நஃபீஸா வசிக்கும் வீட்டில் வாரத்திற்கு மூன்றுதடவை போலீஸ் விசாரிக்க வருகிறது. எந்த நிமிடமும் போலீஸ் வரலாம் என்ற அச்சத்தில் வாழ்க்கையை ஓட்டுகிறார் ஹெல்த் சூப்பர்வைசராக பதவி வகித்து ஓய்வு பெற்ற நஃபீஸா

கருத்துகள் இல்லை: