திங்கள், டிசம்பர் 19, 2011

வீட்டை உல்லாச விடுதியாக்கினார்: குடும்ப பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கேரள பெண் கைது; கிழக்கு கடற்கரை சாலையில் 3 அழகிகள் சிக்கினர்

சென்னையில் விபசாரத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அவ்வப்போது அதிரடி வேட்டை நடத்தி விபசார புரோக்கர்களை கைது செய்து வருகிறார்கள்.   
 
பெரம்பூர் ஜமாலியா எஸ்.பி.ஓ.ஏ. காலனியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு வசித்து வரும் மீனா (வயது 37) என்ற பெண், குடும்ப பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.
 
கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராதிகா, உதவி கமிஷனர் கிங்ஸ்லின் ஆகியோரது மேற்பார்வையில், விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையிலான போலீசார் மீனாவை பிடிக்க வலை வரித்தனர்.  
 
மீனாவின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து அதில் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் போல போலீசார் பேசினர். அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்க ஆசைப்படுகிறோம். நாங்கள் 2 பேர் இருக்கிறோம். 2 பெண்கள் தேவைப்படுகிறார்கள் என்று கூறியதும், மீனா குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொன்னார்.
 
உடனே போலீசார் அங்கு சென்று மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது மீனா வீட்டு முகவரியை கொடுத்தார். இதையடுத்து போலீஸ்காரர் ஒருவர் வாடிக்கையாளர் போல அங்கு சென்றார். அவரிடம் மீனா 2 பெண்களை அறிமுகப்படுத்தினார். 2 பேரும் திருமணமாகி கணவர்-குழந்தைகளுடன் வசித்து வருபவர்கள்.  
 
ஒருவர் தரமணியை சேர்ந்தவர். இன்னொருவர் கே.கே. நகர் ராணி அண்ணா நகரைச் சேர்ந்தவர். 2 பேரும் ஷாப்பிங் செல்வதாக பொய் சொல்லி விட்டு உல்லாசம் அனுபவிப்பதற்காக அங்கு வந்துள்ளனர். போலீஸ்காரர் பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தபோதே, இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையிலான போலீசார் மீனாவின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர்.  
 
பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய மீனா கைது செய்யப்பட்டார். 2 பெண்களும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீனா கேரளாவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பாபு ஆந்திராக்காரர். மாதம் ரூ.20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு குடியிருந்து வரும் மீனா, இதுபோன்று குடும்ப பெண்களை வரவழைத்து வீட்டை உல்லாச விடுதியாக மாற்றியதும் தெரிய வந்தது. இதற்காக தான் வாடகைக்கு இருந்த வீட்டை உள்வாடகைக்கு விட்டு அவர் பணம் சம்பாதித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  
 
ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆயுர்வேதிக் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் செய்வதாக விளம்பரம் செய்து, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கேரளாவைச் சேர்ந்த திலீப், சபின் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 அழகிகள் மீட்கப்பட்டனர்.
 
இதேபோல அசோக் பில்லர் அருகே தனம் என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டார்.   ஆவடி திருமுல்லைவாயலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யாஸ்மின் என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். தனது வீட்டை விபசார விடுதியாக மாற்றி விபசாரத்தில் ஈடுபட்ட யாஸ்மினுக்கு அதுவே எமனாக மாறிவிட்டது.
 
எம்.ஜி.ஆர். நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே பாணியில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில், வீட்டில் வைத்து விபசாரத்தில் ஈடுபடுவது நூதன கலாச்சாரமாக மாறியுள்ளது. எனவே அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள், பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது. யார்-யார் வந்து செல்கிறார்கள் என்பதையும் ஓரளவுக்கு கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் கூறுகின்றனர்.  
 
இண்டர்நெட் மூலமாக இளைஞர்களை கவர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும், பங்களாக்களிலும் விபசாரத்தில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மற்றும் குடும்ப பெண்கள் தங்களது குடும்பத்தினருக்கு தெரிந்தும், தெரியாமலும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகின்றனர்.இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் திரிபாதி எச்சரித்துள்ளார்.
 
மேலும், இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: