கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு
[ உமரின் தோற்றம் குறித்து எழுதியிருக்கும் ஆசிரியர்கள் அத்தனைபேரும் அவரை, அவர் புதிய ஆடைகள் அணிந்து ஒருபோதும் பார்த்ததில்லை என்று சொல்லுகிறார்கள்.
எப்போதும் துண்டு துண்டாக துணிகளைத் தொகுத்து, கையால் தைத்து ஒட்டுப்போட்ட அங்கியையே அவர் அணிந்திருப்பார்.
அணிந்திருக்கும் ஓர் அங்கி, மாற்று உடையாக ஓர் அங்கி. இதைத்தவிர வேறு உடைகள் அவருக்குக் கிடையாது.
அகங்காரம் மிகுந்துவிடாமலிருப்பதற்காக, வீடு வீடாகப் போய் காலைவேளையில் பால் கறந்து கொடுப்பது, வயதான பெண்மணிகளின் வீடுகளுக்குப் போய்ப் பாத்திரங்கள் தேய்த்துக் கொடுப்பது, துணிகளைத் துவைத்துக் காயவைத்து, மீண்டும் மாலை வேளையில் சென்று மடித்துத் தந்துவருவது என்பன போன்ற நம்பமுடியாத காரியங்களை கலீஃபா ஆன பிறகும் உமர் ரளியல்லாஹு அன்ஹு தொடர்ந்து செய்துவந்திருக்கிறார்.
தங்களது சக்ரவர்த்தி எப்படியெல்லாம் இருப்பார் என்கிற பெரிய எதிர்பார்ப்புடன் ஜெருசலேமில் உமரின் நகர்வலத்தின்போது பார்க்கக் கூடிய அரேபியர்கள் வியப்பில் பேச்சு மூச்சற்றுப் போய்விட்டார்களாம். மாபெரும் வீரர் என்று வர்ணிக்கப்படும் உமர், அந்த நகர்வலத்தின்போது ஓர் எளிய சந்நியாசியைப் போலவே காட்சியளித்தார் என்று எழுதுகிறார்கள் பல சரித்திர ஆசிரியர்கள்.]
ஜெருசலேமில் முதல் முதலில் இஸ்லாமியர் ஆட்சி வந்தது கி.பி. 638-ல். அது கலீஃபா உமரின் காலம்.அதுவரை யூதர்களாலும் ரோமானியர்களாலும் கிறிஸ்துவர்களாலும் எகிப்திய பைசாந்தியர்களாலும் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது ஜெருசலேம்.ஃபலஸ்தீன நிலப்பரப்பின் மூத்தகுடிகளான அரேபியர்களுக்கு, இது தங்கள் மண் என்கிற எண்ணமே கிட்டத்தட்ட மறந்துவிடும் அளவுக்குப் பல நூற்றாண்டுக் காலம் தொடர்ந்தது இது. யூதர்கள், கிறிஸ்துவர்கள் எல்லாம் ஆளப்பிறந்தவர்கள், தாங்கள் அடங்கிவாழ விதிக்கப்பட்டவர்கள் என்று மிகவும் இயல்பாகவே அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு மாற்றுச் சிந்தனையாக தாங்களும் ஆளலாம் என்று எண்ணத் தொடங்கியதே உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான். ஏனெனில், இஸ்லாமிய மன்னர்களுள் முதல் முதலாக, ஒரு திட்டவட்டமான செயல்திட்டம் வகுத்துக்கொண்டு தேசத்தின் எல்லைகளை விஸ்தரிப்பது என்று புறப்பட்டவர் உமர்தான்.
கைப்பற்றும் தேசங்களையெல்லாம் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுவந்த உமர், மிகவும் ஜாக்கிரதையாக இஸ்லாத்தை அந்நாட்டு மக்களின்மீது திணிக்காமல் இருக்க தம் தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். பிரசாரங்களைக்கூட அரேபியர்களிடம் மேற்கொள்ளலாமே தவிர யூதர்களிடமோ, கிறிஸ்துவர்களிடமோ வேண்டாம் என்று உமர் ஓர் உத்தரவில் தாமே கைப்பட எழுதித் தந்திருப்பதாக ஐரோப்பாவைச் சேர்ந்த சில இஸ்லாமியச் சரித்திர ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மத நல்லிணக்க அறிக்கையின் தொடர் நடவடிக்கையாக எடுத்துக்கொள்வது இஸ்லாமியர் வழக்கம். ஆனால் ஒரு தெளிவான ராஜதந்திரியின் புத்திசாலித்தனமான நடவடிக்கை என்றே பெரும்பாலான அரசியல் வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.உண்மையில், உமருக்கு இஸ்லாத்தைப் "பரப்ப" வேண்டிய அவசியம் அத்தனையன்றும் தீவிரமாக இருப்பதாக அப்போது தோன்றவில்லை. தானாகவே அது பரவிக்கொண்டிருந்தது. ஆகவே, அமைப்பு ரீதியில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை வலுவாக நிறுவுவதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. அடிமைகளாகவே இருந்து பழகிவிட்ட அரேபியர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை உண்டுபண்ணுவதே அவரது முதல் சிந்தனையாக இருந்திருக்கிறது. இந்தச் செயல்பாடுகள் ஒழுங்காக நடைபெறும் பட்சத்தில், ஒட்டுமொத்த அரேபிய சமூகமும் இஸ்லாத்தில் இணைவது பெரிய விஷயமாக இருக்காது என்றே அவர் கருதினார். ஏனெனில், "மனப்பூர்வமாக அன்றி, உயிருக்குப் பயந்தோ, தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவோ இஸ்லாத்தை ஏற்பது இறைவனாலேயே அங்கீகரிக்கப்படாது" என்ற பொருளில் வரும் குர் ஆனின் ஒரு வசனத்தின்மீது அவருக்கு அளப்பரிய நம்பிக்கை உண்டு.
இதன் அடிப்படையில்தான், அவர் தாம் கைப்பற்றும் தேசங்களில் உள்ள பிற இனத்தவர் அனைவரிடமும் "உங்கள் உரிமைகள் அவசியம் பாதுகாக்கப்படும்" என்று முதலில் சொல்லிவிடுவது வழக்கம். இன்னும் ஒரு படி மேலே சென்று ஒருமுறை, "இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் பிரதிநிதியாக ஓர் ஆளுநரை நான் உங்களுக்கு நியமிக்கிறேன். அவரது பணி உங்கள் தோலை உரிப்பதோ, உங்கள் சொத்தை அபகரிப்பதோ அல்ல. உங்கள் மார்க்கத்தை நீங்கள் பின்பற்றிச் செல்வதற்கு எந்த இடையூறும் இன்றிப் பாதுகாப்பது மட்டுமே. இதிலிருந்து எந்த ஆளுநராவது தவறுகிறார் என்றால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். உரிய தண்டனை அவருக்கு நிச்சயம் உண்டு" என்று பேசியிருக்கிறார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகுதான் உமர் எகிப்தின் மீது படையெடுத்தார். எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்தவர்கள், பைசாந்தியர்கள். (பைசாந்தியர்கள் என்பது இனத்தின் அடையாளப்பெயர். மத ரீதியில் அவர்கள் அனைவரும் கிறிஸ்துவர்களே.)
அன்றைய தேதியில் உலகின் மிக வலுவான ராணுவம் கொண்ட தேசங்களுள் ஒன்று எகிப்து. ரோமானிய ராணுவத்துக்கு அடுத்தபடி மிகப்பெரிய ராணுவமாக அது இருந்தது. பேரரசின் ஆண்டுச் செலவுக்கணக்கில் மூன்றிலொரு பங்கை ராணுவத்துக்குச் செலவழித்துக்கொண்டிருந்தார்கள். (மிகப்பெரிய குதிரைப்படையும், கடலளவு நீண்ட காலாட்படையும், அச்சமூட்டக்கூடிய யானைப்படையும் கொண்டது எகிப்து ராணுவம் என்று எழுதுகிறார் இப்னு அஜ்வி என்கிற ஒரு சரித்திர ஆசிரியர். யுத்தங்களுக்காகவே ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து யானைகளை ஓட்டிவந்து வருடம் முழுவதும் பழக்குவார்களாம்.)
ஆனால், புதியதொரு பேரரசை நிறுவுவது என்கிற மாபெரும் கனவுடனும் தன்னம்பிக்கையுடனும் யுத்தத்தில் பங்குபெற்ற இஸ்லாமிய வீரர்களின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு முன்னால் பைசாந்திய ராணுவத்தால் தாக்குப்பிடிக்க இயலவில்லை. பல இடங்களில் தோல்வியை ஒப்புக்கொண்டு முழந்தாளிட்டார்கள். வேறு பல இடங்களில் வாளுக்கு இலக்காகி அவர்களது தலைகள் மண்ணைத் தொட்டன. (யுத்தத்தில் வாகனங்களாகப் பயன்படுத்தப்பட்ட மிருகங்களின்மீது தாக்குதல் தொடுப்பதில்லை என்பதை உமர் ஒரு கொள்கையாக வைத்திருந்ததாகச் சில ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இதற்குத் தக்க ஆதாரங்களாக மிகப்பழைய அதாவது கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு மிக நெருக்கமான பிரதிகளிலிருந்து எதையும் பெற இயலவில்லை.)
சரித்திரத்தில், மிகக் கடுமையான யுத்தங்கள் என்று வர்ணிக்கப்படுவனவற்றுள் ஒன்று இது. எத்தனை தினங்கள் நடைபெற்றன என்பது பற்றிய திட்டவட்டமான புள்ளிவிவரங்கள் ஏதும் கிடைக்கவில்லையாயினும், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகே பைசாந்தியர்கள் தோல்வியைத் தழுவியதாகத் தெரிகிறது.
எகிப்துப் பேரரசின் மீதான உமரின் இந்தத் தாக்குதலை முதலில் வைத்துத்தான், வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்பத் தொடங்கினார்கள் என்று மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் ஆரம்பிக்கிறார்கள். ஆனால், யுத்தத்தின் இறுதியில் நடைபெற்ற சம்பவத்தை ஒருகணம் சிந்திக்க இயலுமானால் இந்த வாதத்தின் அடிப்படை நொறுங்கிவிடுவதைப் பார்க்கலாம்.
அன்றைய எகிப்துப் பேரரசு என்பது இன்றைய எகிப்து நிலப்பரப்பு அளவே உள்ளதல்ல. வடக்கே பாலஸ்தீனைத் தாண்டி சிரியாவுக்கு அப்பாலும் சிறிது பரவியிருந்தது. வடகிழக்கில் ஜோர்டானின் சில பகுதிகளும் அன்றைய எகிப்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. இன்னும் எளிமையாகப் புரிய வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். ஜெருசலேத்தை மையமாக வைத்து ஒரு வட்டம் போட்டால், அந்த முழு வட்டமும் எகிப்து சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்டதாக இருந்தது.
யுத்தத்தில் வெற்றிகண்ட உமரின் ராணுவம், பெருத்த ஆரவாரத்துடன் ஜெருசலேத்தில் நுழைந்தது. பாலஸ்தீனத்து அரேபியர்கள் அத்தனை பேரும் மகிழ்ச்சிப் பெருக்கில் பிரமாண்டமான வரவேற்பு விழா எடுத்தார்கள். கிறிஸ்துவர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்துவிட்டோம் என்கிற பரவசத்தில், அந்த வெற்றியை இறைவனின் வெற்றியாக முழக்கமிட்டார்கள். ஃபலஸ்தீனில், யூதர்களின் மேலாதிக்கத்தை கிறிஸ்துவர்கள் அடக்கியிருந்தார்கள். இப்போது கிறிஸ்துவர்களின் ஆதிக்கத்துக்கும் ஒரு முடிவு வந்திருக்கிறது என்கிற சந்தோஷம் அவர்களுக்கு. இந்த மகிழ்ச்சியை எதிலிருந்து கொண்டாட ஆரம்பிக்கலாம்? மிகச்சிறந்த வழி, ஜெருசலேம் நகரின் புகழ்பெற்ற, மாபெரும் கிறிஸ்துவ தேவாலயத்தில் உமர், தொழுகை செய்யவேண்டும். அதன்மூலம் ஃபலஸ்தீனில் இஸ்லாம் காலூன்றிவிட்டதை அழுத்தந்திருத்தமாக நிறுவிவிடலாம்.
ஒட்டுமொத்த ஃபலஸ்தீனத்து அரேபியர்களும் இத்திட்டத்தை ஆமோதித்து உமரிடம் தங்கள் விருப்பமாக இதனைத் தெரிவித்தார்கள்.
ஆனால் உமர் உடனடியாக இதை மறுத்துவிட்டார். அவர் சொன்ன காரணம்: "நான் தொழுகை நடத்தினால், முதல்முதலில் தொழுகை நடத்தப்பட்ட இடம் என்று சொல்லி நீங்கள் மசூதி கட்டிவிடுவீர்கள். அது கிறிஸ்துவர்களுக்கு வருத்தம் தரலாம்."இது கதையல்ல. இஸ்லாமிய சரித்திரத்தின் ஓரங்கமான இச்சம்பவம் அனைத்து யூத, கிறிஸ்துவ வரலாற்று நூல்களிலுமேகூடப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உமரின் இந்த முடிவையும், இதனைத் தொடர்ந்து கலீஃபாக்களின் ஆட்சியில் யூதர்கள் எத்தனை நிம்மதியுடன் வாழ முடிந்தது என்பதையும் பக்கம் பக்கமாக வர்ணித்திருக்கிறார்கள்.
உமரின் தோற்றம் குறித்து எழுதியிருக்கும் ஆசிரியர்கள் அத்தனைபேரும் அவரை, அவர் புதிய ஆடைகள் அணிந்து ஒருபோதும் பார்த்ததில்லை என்று சொல்லுகிறார்கள்.
எப்போதும் துண்டு துண்டாக துணிகளைத் தொகுத்து, கையால் தைத்து ஒட்டுப்போட்ட அங்கியையே அவர் அணிந்திருப்பார்.
அணிந்திருக்கும் ஓர் அங்கி, மாற்று உடையாக ஓர் அங்கி. இதைத்தவிர வேறு உடைகள் அவருக்குக் கிடையாது.
அகங்காரம் மிகுந்துவிடாமலிருப்பதற்காக, வீடு வீடாகப் போய் காலைவேளையில் பால் கறந்து கொடுப்பது, வயதான பெண்மணிகளின் வீடுகளுக்குப் போய்ப் பாத்திரங்கள் தேய்த்துக் கொடுப்பது, துணிகளைத் துவைத்துக் காயவைத்து, மீண்டும் மாலை வேளையில் சென்று மடித்துத் தந்துவருவது என்பன போன்ற நம்பமுடியாத காரியங்களை கலீஃபா ஆன பிறகும் உமர் ரளியல்லாஹு அன்ஹு தொடர்ந்து செய்துவந்திருக்கிறார்.
தங்களது சக்ரவர்த்தி எப்படியெல்லாம் இருப்பார் என்கிற பெரிய எதிர்பார்ப்புடன் ஜெருசலேமில் உமரின் நகர்வலத்தின்போது பார்க்கக் கூடிய அரேபியர்கள் வியப்பில் பேச்சு மூச்சற்றுப் போய்விட்டார்களாம். மாபெரும் வீரர் என்று வர்ணிக்கப்படும் உமர், அந்த நகர்வலத்தின்போது ஓர் எளிய சந்நியாசியைப் போலவே காட்சியளித்தார் என்று எழுதுகிறார்கள் பல சரித்திர ஆசிரியர்கள்.
நகர்வலத்தின் இறுதியில் மக்களிடையே உரையாற்றிய உமர், ஒரே ஒரு விஷயத்தை மிகவும் அழுத்தம் கொடுத்துப் பேசினார். "யூதர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் மூவருமே நபி இப்ராஹிம் (ஆபிரஹாம்) அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழித்தோன்றல்கள். சண்டையின்றி ஒற்றுமையாக வாழவேண்டியது அவசியம்.
"இந்தச் சொற்பொழிவு, அதுநாள் வரை ஜெருசலேமை ஆட்சி செய்துவந்த கிறிஸ்துவர்களுக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தைத் தந்தது. பொதுவாகப் போரில் வெல்லும் மன்னர்கள், தமது மதத்தை அனைவரும் ஏற்றே தீர நிர்ப்பந்தம் செய்வதே அந்நாளைய வழக்கம். ஒரு மாறுதலுக்கு உமர், கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாமல், அவர்களால் விரட்டியடிக்கப்பட்ட ஜெருசலேம் நகரின் யூதர்களையும் திரும்பவந்து அங்கே வாழும்படி அழைப்பு விடுத்தார்.
"நீங்கள் தைரியமாக ஜெருசலேத்துக்குத் திரும்பிவரலாம். யாராலும் உங்களுக்குத் தீங்கு நேராமல் பார்த்துக்கொள்வது என் பொறுப்பு" என்கிற உமரின் உத்தரவாதத்தை நம்பி சுமார் எழுபது யூதக் குடும்பங்கள் அன்று ஜெருசலேம் திரும்பியதாகத் தெரிகிறது.
இதோடு நிறுத்தவில்லை. ஜெருசலேத்திலிருந்து யூதர்களை கிறிஸ்துவர்கள் விரட்டியபிறகு, அங்கிருந்த யூத தேவாலயங்கள் நகரசபையின் கழிவுப்பொருள் சேகரிப்புக் கிடங்குகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அதாவது, கிறிஸ்துவர்கள் தமது யூதவெறுப்பை அப்படியாக வெளிக்காட்டியிருந்தார்கள்.
ஜெருசலேம் கைப்பற்றப்பட்டபிறகு அங்கே உமர் வெளியிட்ட முதல் அரசு உத்தரவு, அந்தக் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டுமென்பதுதான். உத்தரவிட்டதுடன் நின்றுவிடாமல், குப்பை அள்ளும் பணியில் முதல் கரம் கொடுத்ததும் அவரேதான். இதுவும் பல யூத சரித்திர நூல்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் சம்பவமே. (ஆனால் கிறிஸ்துவ ஆசிரியர்களின் நூல்களில் இந்தச் சம்பவம் எழுதப்பெறவில்லை.)
- ப.ராகவன்
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 6 பெப்ரவரி, 2005
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக