புதன், மார்ச் 23, 2011

முஸ்லிம் சமுதாயம் அப்துல்லாஹ்வைத் தவறாகப் பயன்படுத்துகிறதா?

"பெரியார்தாசன் அப்துல்லாஹ்வாக மாறி ஓராண்டு ஆகிவிட்டது. அவர் இஸ்லாத்திற்கு வந்ததில் இருந்து இன்றுவரை அவர் முஸ்லிம்கள் மத்தியிலேயே ‘பிசி’யாக இருக்கிறார். இது அப்துல்லாஹ் என்கிற ஆளுமையின் தவறா? அல்லது அப்துல்லாஹ்வைத் தவறாகப் பயன்படுத்தும் முஸ்லிம் சமூகத்தின் தவறா? ஏனெனில் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) ஒரு போர்க்கருவி.

அந்தக் கருவியைப் பொதுக்களத்திலும், அறிவுத்தளத்திலும் பயனுள்ள வகையில் பயன்படுத்தாமல்
 புழக்கடையில் போட்டு வைத்திருக்கிறது முஸ்லிம் சமுதாயம்... '"

இப்படி ஓர் அபாண்டமான குற்றச்சாட்டை முஸ்லிம் சமுதாயத்தை நோக்கி வீசியிருக்கிறார் அன்புச் சகோதரர் ஆளூர் ஷாநவாஸ். (சமநிலைச் சமுதாயம் மார்ச், 2011) ‘புழக்கடையில் போர்க்கருவி’ எனும் தலைப்பிட்ட அவருடைய நீ.....ண்ட ஏழு பக்கக் கட்டுரை அப்துல்லாஹ் பற்றிய திறனாய்வு மட்டுமே இருக்கும் என நினைத்து ஆவலுடன் படித்தால் குழப்பமே மிஞ்சியது.

1. பெரியார்தாசனும் முஸ்லிம் சமூகமும்.


2. இஸ்லாமிய அமைப்புகளும் அழைப்புப் பணியும்

3. அழைப்பப் பணியும் முஸ்லிம்களும்

4. களப்பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்

5. இஸ்லாத்தைத் தழுவி வந்தோரின் சிக்கல்கள்

என ஐந்து தலைப்புகளில் நிதானமாகத் தொலைநோக்குடன்; எழுதவேண்டிய ஆக்கங்களை ஒரே கட்டுரையில் அவசர அடியாகப் போட்டு குழப்பியுள்ளார்.
பெரியார்தாசன் அப்துல்லாஹ்வாக மாறியது கண்டு முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சியடைந்தது உண்மைதான். அதைத்தவறு என்று சொல்ல முடியாது. நாடறிந்த பன்முக ஆளுமை கொண்ட ஒருவர் இறைநெறியை ஏற்றுக்கொண்டபோது அவரை நெஞ்சிலே ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து வரவேற்றதில் என்ன தவறு கண்டுவிட்டார் ஷா நவாஸ்?

‘அப்துல்லாஹ்வாக மாறியதிலிருந்து அவர் முஸ்லிம்கள் மத்தியிலேயே ‘பிசி’யாக இருக்கிறார், இது யாருடைய தவறு?’ என்று வினவுகிறார் ஆளூரார். இது ஒரு குழப்ப வினா. முஸ்லிமான பிறகு முஸ்லிம்கள் மத்தியில் இருக்காமல் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் யூதர்கள் மத்தியிலுமா போய் இருக்க முடியும்?

கூட்டங்களில் கலந்துகொள்ளும்படி முஸ்லிம்கள் அன்போடு அழைக்கும்போது அப்துல்லாஹ் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதிலோ, முஸ்லிம்கள் மத்தியில் தம் பட்டறிவைப் பகிர்ந்து கொள்வதிலோ, அதன் மூலம் சமுதாயத்தினருக்கும் களப்பணியாளர்களுக்கும் சில புதிய வெளிச்சங்களைக் காட்டுவதிலோ தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

‘முஸ்லிம் சமுதாயத்தில் இந்துத்துவாவைக் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள ஆளுமைகள் எவரும் இல்லை. அந்தப் போதாமையைப் போக்கும் வகையில் வந்திருக்கும் பெரியார்தாசனுக்கு, இந்துத்துவாவுக்கு எதிரான தளத்தை முஸ்லிம் சமுதாயம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்’ என்கிறார் ஆளூர் ஷாநவாஸ்.

இதற்குப் பெயர் ஆலோசனையல்ல, அபத்தம். இந்துத்துவாவைக் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள தேசிய அளவிலும் மாநில அளவிலும் முஸ்லிம் அறிஞர் பெருமக்கள் பலர்; உள்ளனர். அந்தப்பட்டியல் நீளமானது. அவ்வளவு ஏன், சமநிலைச் சமுதாயத்தின் பத்தி எழுத்தாளரான மதிப்பிற்குரிய தோழர் அப்துல் அஜீஸ் பாகவியிடம் சொல்லிப் பாருங்கள் இந்துத்துவவை நார் நாராய் கிழித்துத் தோரணம் கட்டிவிடுவார்.

இன்னொன்று; கண்டு மிரளும் அளவுக்கு இந்துத்துவா ஒன்றும் பெரிய சித்தாந்தமோ தத்துவதோ அல்ல. அந்த கொள்கையை எதிர்ப்பதுதான் நோக்கம் எனில் அதற்கு ‘அப்துல்லாஹ்வாக’ மாறவேண்டிய அவசியமும் இல்லை.

பேராசிரியர் அப்துல்லாஹ்வை முஸ்லிம் சமுதாயம் எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தவுமில்லை. தவறாகப் பயன்படுத்தும் அளவுக்கு பேராசிரியர் அப்துல்லாஹ் எடுப்பார் கைப்பிள்ளையும் அல்லர் என்பதை இப்போதைக்கு சொல்லி வைக்கிறோம்.

- சிராஜுல் ஹஸன்


  நன்றி: சமரசம், 16-31 மார்ச் 2011

முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு கேள்வி: இன்னும் எவ்வளவு காலத்திற்கு அவரை பெரியார்தாசன் என்றே அழைத்துக் கொண்டிருப்பீர்கள் ?!

''அப்துல்லாஹ்'' என்றே அழையுங்கள் மக்களுக்குப்புரியாமல் இருக்காது. பெயர்களிலேயே மிகவும் சிறப்பிற்குறிய பெயரன அப்துல்லாஹ் - 'அல்லாஹ்வின் அடியார்' எனும் பெயரை பயன்படுத்துவதை விட்டுவிட்டு திரும்பத்திரும்ப அவரை பெரியார்தாசன் என்று அழைப்பது முஸ்லிம்களின் பலவீனம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு அறிமுக அடையாளத்திற்கு ஆரம்பத்தில் பயன்படுத்தியதை இனியும் தொடர்வது சரியல்ல.

உதாரணமாக உலகக்குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலீ இஸ்லாத்தைத்தழுவிய ஆரம்ப நாட்களில் அவரை அவரது பழைய பெயரான ''கேஷியஸ் கிளே'' என்று எவெரேனும் அழைத்தால் அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். ''ஒரு அடிமைத்தனமான பெயரில் என்னை அழைக்காதீர்கள், முஹம்மது அலீ (புகழுக்குறிய உயர்ந்தவர்) என்றே அழையுங்கள்'' என்று அவர் ஓங்கி ஒலித்ததை நினைவுபடுத்திக்கொள்வோம்.
குத்துச்சண்டையின்போது சில வீரர்கள் அவரை பழைய பெயரில் அழைக்கும்போது அவர்களிடம் 'என்னுடைய பெயர் முஹம்மது அலீ' என்று சொல்லியே எதிரிகளை ஓங்கி ஓங்கி குத்துவிட்டார் என்பது அக்காலத்தின் பிரபலமான செய்தி.

இன்று அவரை கேஸ்ஷியஸ் கிளே என்று அழைப்பவர் எவரும் இல்லை. ஆகவே, இனி அப்துல்லாஹ்வை அப்துல்லாஹ் என்றே அழைப்போம்.
















''என்னை 'அப்துல்லாஹ்' என்றே அழையுங்கள்''.
ஒரு வாசகரின் கருத்தை இங்கு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
நாங்கள் ஜித்தாவில் சகோ.அப்துல்லாஹ்வை அழைத்து முதன் முதலாக மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சி நடத்தினோம். அப்போது நீங்கள் சுட்டிக்காட்டியது நினைவு வந்தது. தான் மகப்பெரிய சாதனை செய்தபோதெல்லாம் எழுதாத பத்திரிக்கைகள். இஸ்லாத்தை ஏற்றபிறகு எல்லா பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக திட்டியும், போற்றியும் எழுதிவிட்டார்கள் என்றார்கள். எனவே உலகம் முழுவதும் தான் முஸ்லிமாக மாறியது தெரிந்துவிட்டது. எனவே இதற்கு இன்றோடு முடிவுகட்டிவிட வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே என்னை 'அப்துல்லாஹ்' என்றே அழையுங்கள் என்றார்கள். அதை யாரும் பின்பற்றுவதாக தெரியவில்லை இதை தாங்கள் நினைவு படுத்தியது பாராட்டுக்குறிது. அதை பின் பற்றுவதுதான் அவரை நாம் நேசிப்பதாகவும் அமையும் அது தான் இஸ்லாமிய நடைமுறையும் கூட.

கருத்துகள் இல்லை: