மேற்குவங்காளத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் முஸ்லிம்களை கவருவதற்காக பல தந்திரங்களை மேற்கொள்ளும் வேளையில் 141 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் என கருதப்படுகிறது.
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிபரப்படி 141 தொகுதிகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மைக்கு 147 இடங்கள் தேவை. ஆகவே, 141 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் மேற்குவங்காள அரசியலில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் எனக் கருதப்படுகிறது.
2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரத்தின் அடிப்படையில் 25.25 சதவீத முஸ்லிம்கள் மேற்குவங்கத்தில் வசிக்கின்றனர்.
நடைபெறவிருக்கும் ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பில் இந்த சதவீதம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 48 தொகுதிகளில் முஸ்லிம் மக்கள்தொகை 50 சதவீதத்திற்கும் அதிகமானதாகும். 17 தொகுதிகள் 40-50 சதவீதத்திற்கு இடைப்பட்டதாகும். 30-40 சதவீத முஸ்லிம்கள் வசிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 26 ஆகும். 50 தொகுதிகளில் முஸ்லிம்களின் மக்கள்தொகை சதவீதம் 20-30 ஆகும்.
அட்டவணைப்படுத்த ஜாதியினருக்காக ஒதுக்கப்பட்ட 35 தனி தொகுதிகளில்(ரிசர்வ் தொகுதிகள்) முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் அதிகமாகும். 20 தனித் தொகுதிகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 20-30 சதவீதமாகும். ஆறு தனித் தொகுதிகளில் 30-40 சதவீதமாகும். மூன்று தனித் தொகுதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
தேசிய கட்சிகளில் 115 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 78 பேருக்கு ஓரளவு வெற்றி வாய்ப்பு உள்ளது. 38 பேர் வெற்றிப் பெறுவது உறுதி எனக் கருதப்படுகிறது.
மக்களவை-உள்ளாட்சி தேர்தல்களில் முஸ்லிம் வாக்கு வங்கியில் ஏற்பட்ட பாதிப்பால் இடதுசாரிகள் தற்பொழுது 56 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் இடதுசாரிகள் 44 முஸ்லிம் வேட்பாளர்களுக்கே வாய்ப்பளித்தனர். 228 வேட்பாளர்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பட்டியலில் 39 முஸ்லிம் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஆறுபேர் பெண்களாவர். 65 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களில் 21 பேர் முஸ்லிம்களாவர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டமான முர்ஷிதாபாத்தில் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளனர். முர்ஷிதாபாத்தில் 18 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மத்தியில்தான் போட்டி நிலவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக