சிறுபான்மை விரோத இடதுசாரிகளுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரிவு செயலாளர் ஹமீத் வாணிமேல் அவ்வமைப்பை விட்டு வெளியேறியுள்ளார்.அகில இந்திய பிரதிநிதி, மாநில செயற்குழு உறுப்பினர், ஷூரா(கலந்தாலோசனை) உறுப்பினர் உள்பட அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார் அவர்.
தனது பதவிகளை ராஜினாமா செய்தது குறித்து அவர் கூறியதாவது:கடந்த ஐந்து வருட கால இடதுசாரிகளின் ஆட்சியை சரியாக மதிப்பீடு செய்யாமல் வருகின்ற கேரள
மாநில சட்டமன்ற தேர்தலில் இடதுசாரிகளுக்கு வாக்களிக்க ஜமாஅத்தே இஸ்லாமி தீர்மானித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்துள்ளேன்.இடதுசாரிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னோடியாக ஜமாஅத்தே இஸ்லாமியின் கேரள அமீர்(தலைவர்) டி.ஆரிஃப் அலி சி.பி.எம் செயலாளர் பிணராய் விஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.இடதுசாரி அரசின் சிறுபான்மை விரோத கல்விக்கொள்கைக்கு எதிராகவும், இயற்கைக்கு விரோதமான வளர்ச்சித்திட்டங்களுக்கு எதிராகவும் சோலிடாரிட்டியும்(ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னணி இயக்கம்), எஸ்.ஐ.ஓவும்(ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் அமைப்பு) கடந்த ஐந்து வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.இந்த போராட்டங்களை இடது சாரி முன்னணி அரசு வீதிகளில் எதிர்கொண்டது.அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி ஜமாஅத்தே இஸ்லாமியை அழிப்பதற்கு முயல்வது, தீவிரவாத இயக்கம் என பிரச்சாரம் செய்து வருவது என ஒரு புறமும், மறுபுறம் வாக்குகளுக்காக ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டுவருகிறது.இத்தகைய கபடத்தனமான கொள்கைகளை கொண்ட இடதுசாரிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது ஜமாஅத்தே இஸ்லாமிக்கு உகந்தது அல்ல.இயக்கம் கடந்த காலங்களில் பின்பற்றிய தனித்தன்மைக்கும், உறுதிக்கும் எதிரானதுதான் இந்த அணுகுமுறை.இச்சூழலில் தான் நான் ராஜினாமா செய்கிறேன்.இவ்வாறு ஹமீத் வாணிமேல் தெரிவித்தார்.
ஆனால், ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் கேரள மாநில பொதுச்செயலாளர் எம்.கே.முஹம்மது அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரள சட்டமன்ற தேர்தலில் யாரை ஆதரப்பது? என்பது இதுவரை தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக