ஊழலை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள லோக்பால் மசோதாவின் வரைவுத்திட்ட உருவாக்கம் குறித்து மக்களின் கருத்தை ஆராய மசோதா வரைவு கூட்டுக் குழுவின் முதல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெற வேண்டுமென்று அதன் முதல் வரைவுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வருகிற பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலேயே இது சட்டமாக நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு வரைவுக்குழு உறுப்பினரான பிரசாந்த் பூஷனுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் இதனை தெரிவித்தார்.
மசோதா கூட்டு வரைவுக் குழுவின் தீர்மானங்களும், விவாதங்களும் அவ்வப்போது மக்களுக்கு தெரிவிக்கப்படும். கூட்டத்தில் விவாதித்தவற்றின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். கூட்டத்தில் விவாதிக்கும் விஷயங்கள் ஒலிநாடாவில் பதிவுச் செய்து பாதுகாக்கப்படும். மக்களின் விருப்பங்களை பரிசீலித்த பிறகே மசோதா திருத்த வரைவு தயாரிக்கப்படும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுத்தொடர்பாக விவாதம் நடத்தப்படும். பொது சமூகம் மற்றும் அரசின் வரைவு ஆலோசனைகள் குறித்து மக்கள் விருப்பம் ஆராயப்படும். இதனடிப்படையில் மசோதா இறுதிச் செய்யப்படும்.
புதிய ஆலோசனைகளில் ஒன்று,லோக்பால் அமைப்பில் இடம்பெறும் உறுப்பினர்களை நியமிக்கும் குழுவில் மாற்றம் கொண்டு வருவதாகும். இதில் பிரதமரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் இடம்பெற வேண்டும் என இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு குடியரசுத் துணைத் தலைவர்,மக்களவைத் தலைவர் ஆகியோரை நியமனக் குழுவில் இடம்பெறச் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது என்றார் கபில் சிபல். இதுத் தொடர்பாக பொதுமக்கள் கருத்து ஆராயப்படும்.
வரைவுக் குழுவின் கூட்டம் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், விடியோ படம் பிடிக்கப்படவில்லை. லோக்பால் குறித்த அனைத்துக் கூட்டங்களும் விடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும் என பொது நல ஆர்வலர்கள் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் வீடியோ துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளதால் அந்த யோசனை தவிர்க்கப்பட்டது.
மே மாதம் 2-ஆம் தேதி அடுத்தக் கூட்டம் நடைபெறும்.முதல் கூட்டம் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக கபில்சிபல் தெரிவித்தார். 90 நிமிடங்கள் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல், வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகியோர் கலந்து கண்டனர். பொதுநல உறுப்பினர்களாக அண்ணா ஹஸாரே, அரவிந்த் கேஜரிவால், சந்தோஷ் ஹெக்டே, சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு முன்பு குழு உறுப்பினர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட்டனர்.
அதேவேளையில் லோக்பால் மசோதா வரைவு கூட்டுக் குழுவின் இணைத் தலைவரும் முன்னாள் சட்ட அமைச்சருமான சாந்திபூஷன் மீது ஊழல் புகார் வெளியானது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தொலைபேசி உரையாடல் அடங்கிய சி.டி போலியானது என சாந்தி பூஷன் தெரிவித்தார். இதுத் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி அவர் டெல்லி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக