ஜெர்மனியில் கிறிஸ்தவ சர்ச்சுகளின் கண்காணிப்பில் இயங்கும் அனாதை நிலையங்களில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு பலியானதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
ஜெர்மனி நாட்டைச்சார்ந்த இணையதளமான எ.ஆர்.டி இந்த சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இச்செய்தி ஜெர்மன் கிறிஸ்தவ சபைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
1949 மற்றும் 1975 ஆண்டுகளுக்கு இடையே சிறுவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக அவ்வறிக்கை கூறுகிறது. இரண்டாவது உலகப்போருக்கு முன்பு ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தாக்குதலிலும், போருக்கு பிறகு உருவான சிரமங்களாலும் பட்டினியால் வாடிய குடும்பங்கள் தங்களது குழந்தைகளை அனாதை நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நிர்பந்தத்திற்கு ஆளாகினர். இந்த குழந்தைகள்தாம் உடல்ரீதியாகவும், பாலியல்ரீதியாகவும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 36 ஆயிரம் குழந்தைகள் இக்காலக்கட்டத்தில் அனாதை நிலையங்களில் வாழ்க்கையை கழித்துள்ளனர்.
ரோமன் கத்தோலிக் சர்ச்சுகளின் கண்காணிப்பில் நடக்கும் பள்ளிக்கூடங்களில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் பாலியல் ரீதியாக கொடுமைச் செய்யப்படுவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து கடந்த ஆண்டும் ஜெர்மனியில் சர்ச்சை கிளம்பியிருந்தது.
சிறுவர்களை பாலியல் ரீதியாக கொடுமைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு பதிலாக அவர்களை இடம் மாற்றம் செய்ததாகவும் செய்திகள் வெளியாயின.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது உள்ளிட்ட காரியங்களில் கிறிஸ்தவ சபைக்கு வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக