கடந்த 2006-ம் ஆண்டு மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கினைக் குறித்த தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது.
ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இது உறுதியானது என சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
அஸிமானந்தா வாக்குமூலத்தை பின்னர் மாற்றினாலும், போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் வழக்கினை பாதிக்காது என கருதப்படுகிறது.
இதனால் ஐந்து ஆண்டுகளாக இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ஒன்பது பேர் நிரபராதிகள் என்பது நிரூபணமாகியுள்ளது.
சி.பி.ஐக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினரும், சமூக ஆர்வலர்களும் உள்ளனர்.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து இவ்வழக்கில் சி.பி.ஐ மறு விசாரணையை துவங்கியது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில்ஜோஷிதான் மலேகான் குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டவர் என கருதப்படுகிறது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் தடவியல் ஆதாரங்களுடன் புதிய சாட்சிகளும் கிடைத்துள்ளதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது.
மஹாராஷ்ட்ரா மாநிலம் பூர்ணா, ஜர்னா, நந்தத் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய கும்பல்தான் மலேகானிலும் நடத்தியுள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையில் சி.பி.ஐ இவ்வழக்கில் மறுவிசாரணையை துவக்கியது. முன்பு நடந்த குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கினை பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகள் கண்டறிந்திருந்தன.
திட்டமிடல்,வெடிக்குண்டு தயாரிப்பு,குண்டுவெடிப்பை நிகழ்த்திய பாணி ஆகியன இக்குண்டுவெடிப்புகளிலெல்லாம் ஒரேவிதமாக அமைந்திருந்ததை புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர்.
தாக்குதல் நடத்துவதற்கு முன்பு மலேகானுக்கு சென்ற பயங்கரவாத கும்பல் தங்கிய இடமும் நேரில் கண்ட சாட்சிகள் மூலமாக புரிந்துக்கொள்ள இயன்றதாக மூத்த சி.பி.ஐ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
முதல் மலேகான் குண்டுவெடிப்பில் விசாரணையை நடத்தியது மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையாகும். இவ்வழக்கில் ஒரு பாகிஸ்தான் குடிமகன் உள்பட 13 பேரின் மீது குற்றஞ்சுமத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். சிமி, லஷ்கர்-இ-தய்யிபா ஆகிய இயக்கங்களைச் சார்ந்தவர்கள் என குற்றஞ்சாட்டி ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இவர்கள் நிரபராதிகள் என உள்ளூர்வாசிகள் உறுதியாக கூறிய பொழுதிலும் தடவியல் ஆதாரங்கள் இருப்பதாக ஏ.டி.எஸ் கூறியது.
2006-ஆம் ஆண்டு சி.பி.ஐ இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. ஏ.டி.எஸ் அதிகாரிகளின் நிர்பந்தத்தின் காரணமாக பொய்யான வாக்குமூலம் அளித்ததாக அப்ரூவராக மாறிய அப்ரார் அஹ்மத் ஸயீத் என்பவர் நீதிமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து சி.பி.ஐ விசாரணையை ஏற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேர் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டுமெனக்கோரி நீதிமன்றத்தை அணுகினர்.
இவ்வளவு நடந்தபிறகும் மலேகான் போலீஸ், மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் ஆகியன கண்டறிந்தவறை ஆதரித்து கடந்த 2010-ஆம் ஆண்டு சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. ஆனால், அஸிமானந்தா அளித்துள்ள வாக்குமூலம் தமது நிலைப்பாட்டை மாற்றுவதற்கு சி.பி.ஐக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷபே பராஅத் தினத்தில் மலேகான் ஹமீதிய்யா மஸ்ஜிதுக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 32 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
நிரபராதிகளான தங்களை விடுதலைச்செய்ய வேண்டுமெனக்கோரி இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோரில் ஒருவரான டாக்டர்.ஃபாரூக் மக்தூமி சிறைக்குள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக