சனி, ஏப்ரல் 02, 2011

மேலும் இரண்டு அமைச்சர்கள் கத்தாஃபியை கைவிட்டனர்


வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸா குஸாவைத் தொடர்ந்து மேலும் இரண்டு அமைச்சர்கள் கத்தாஃபியை கைவிட்டனர்.இதனால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார் கத்தாஃபி.
ரகசிய புலனாய்வுத்துறை அமைச்சர், வெளியுறவு துணை அமைச்சர், சபாநாயகர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமாச் செய்துவிட்டு துனீசியாவுக்கு சென்றுள்ளனர்.
எண்ணெய் வளத்துறை அமைச்சர் ஷுக்ரி கானிம் ராஜினாமா செய்ததாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். நாட்டைவிட்டு வெளியேறமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவில் லிபியாவின் நிரந்தர பிரதிநிதியாக அண்மையில் கத்தாஃபியால் நியமிக்கப்பட்ட அலி அப்துஸ் ஸலாம் த்ரக்கி பதவியை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
லிபியாவின் பிரதிநிதிகள் அனைவரும் நாட்டிலிருப்பதாக அந்நாட்டின் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கிறார்.சிலர் வெளிநாட்டு சுற்றுப் பயணத்திலிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
1990 முதல் 1994 ஆம் ஆண்டு வரை லிபியாவின் பிரதமராக பதவி வகித்த அபூஸெய்த் தர்தா துனீசியாவிற்கு சென்றுள்ளதாக அல்ஜஸீரா கூறுகிறது.
சிவிலியன்களை தாக்குவதை கண்டித்து லிபியாவின் உள்துறை அமைச்சர் அப்துல் ஃபத்தாஹ் யூனுஸ், சட்ட அமைச்சர் முஸ்தஃபா முஹம்மது அல் ஜலீல் ஆகியோர் ஏற்கனவே ராஜினாமாச் செய்துள்ளனர்.
இதற்கிடையே, லிபியா அரசின் பிரதிநிதி முஹம்மது இஸ்மாயீல் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்காக லண்டனுக்கு சென்றுள்ளார். மூன்று தினங்களுக்கு முன்பு லண்டனுக்கு வருகைத்தந்த அவர் பிரிட்டன் வெளியுறவு துறை உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கத்தாஃபி பதவி விலகுவதற்கான தெளிவான குறிப்பை இது தெரிவிப்பதாக அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேற்கத்திய ராணுவத்தின் விமானத்தாக்குதல் கத்தாஃபியின் ராணுவத்தை தளரச் செய்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. எதிர்ப்பாளர்களுக்கு பயிற்சியோ இதர உதவிகளோ அளிக்கவில்லை என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார். அதேவேளையில், கிழக்கு எண்ணெய் நகரமான ப்ரீகாவில் கடுமையான மோதல் தொடருகிறது.

கருத்துகள் இல்லை: