அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்களை கண்காணிக்க நியூயார்க் போலீசுக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க குடிமகன்களில் ஒரு பகுதியினரை கண்காணிக்க சி.ஐ.ஏ முயன்றதாக அசோசியேட் ப்ரஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியதையடுத்து இதுக்குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை அமைப்பான கவுன்சில் ஆன் அமெரிக்கன் இஸ்லாமிக் ரிலேசன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
சொந்த நாட்டு குடிமக்களின் ரகசியங்களை உளவு பார்ப்பதிலிருந்து ரகசிய புலனாய்வு அமைப்புகளை தடுக்கும் 1974-ஆம் ஆண்டின் சட்டத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிராக சி.ஐ.ஏ செயல்பட்டுள்ளது என அவ்வமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
ரகசிய புலனாய்வு அமைப்பின் சர்ச்சைக்குரிய நடவடிக்கை குறித்து செனட்டில் விவாதிக்க வேண்டும் என அவ்வமைப்பு கோரியுள்ளது.
குடிமக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டதாகவும், இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் எனவும் மனித உரிமை அமைப்பின் தலைவர் ஸய்ரஸ் மக்கோல்ட்ரிக் தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பாக கிடைத்துள்ள புகாரை பரிசோதித்து வருவதாக சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது. நியூயார்க் போலீஸ் துறையில் 40 அதிகாரிகளுடன் நடத்திய நேர்முகத்தை மேற்கோள்காட்டி அசோசியேட் ப்ரஸ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
அதேவேளையில், 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு துவங்கிய நடவடிக்கை இது எனவும் இக்காரியத்தில் மன்னிப்புக்கோர விரும்பவில்லை எனவும் நியூயார்க் போலீஸ் துறை தலைவர் பால் ப்ரவுன் தெரிவித்துள்ளார். சி.ஐ.ஏவுடன் சேர்ந்து செயல்படுவது சட்டவிரோதமல்ல. தங்களின் தந்திரம் 11 தாக்குதல் முயற்சிகளை தடுப்பதற்கு உதவியதாக அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக