பரங்கிப்பேட்டையில் சாயம் மற்றும் கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சிதம்பரத்தில் 35 கிராமத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை கடற்கரையோர பகுதிகளைச் சுற்றி 75-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தொழில் மற்றும் விவசாயமாகும். இந்நிலையில் கடலூர் துறைமுகம் முதல் பரங்கிப்பேட்டை வரை 3 அனல் மின் நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை உள்ளிட்ட 9 தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
இதற்காக பரங்கிப்பேட்டை சுற்று வட்டார 75 கிராமப் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
விளைநிலங்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி இடைத்தரகர்கள் மூலம் குறைந்த விலைக்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிராமங்களில் தொழிற்சாலைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் கிராமத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் சின்னூர், புதுக்குப்பம், கரிக்குப்பம், சின்னாண்டிகுழி, வேளங்கிராயன்பேட்டை உள்ளிட்ட 35 கிராமங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிமுக ஒன்றியச் செயலர் சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் செல்வக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஒன்றியச் செயலர் பழனிவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் ஜாகீர்உசேன், முனைவர் தி.ராஜ்பிரவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அமைச்சர்கள் செல்விராமஜெயம், எம்.சி.சம்பத் ஆகியோரை சந்தித்து மனு கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக