ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

அன்னா ஹசாரேயின் கோரிக்கை ஏற்பு – உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது – அரசு கீழ்ப்படிந்தது

தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்திட அன்னா ஹசாரே முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.  இதனால் இன்று காலை 10 மணிக்கு அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
இதுக்குறித்து அன்னா ஹசாரே கூறும்போது;  ”இது மக்களின் வெற்றி என்றும், அரசின் அறிவுறுத்தலை தான் ஏற்றுக்கொள்வதாகவும்” கூறினார்.
லோக்பாலை மாதிரியாக வைத்து எல்லா மாநிலங்களிலும் லோகாயுக்தாவை உருவாக்க வேண்டும், கீழ்த்தட்டு வரையுள்ள அரசு அதிகாரிகளை லோக்பாலின் வரையறைக்குள் கொண்டு வரவேண்டும், அனைத்துப் பிரிவினருக்கும் குடியுரிமைச் சான்று வழங்கவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை அன்னா ஹசாரே முன் வைத்திருந்தார். இவை அங்கீகரிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
மத்திய அரசு அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றவில்லை. ஆனால் இரு அவைகளிலும் கொள்கை அளவில் அவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பொது ஓட்டெடுப்புநடைபெறாது. இந்த மசோதாவைப் பரிசீலிக்கும் ஒரு நிலைக்குழுவை அரசு அமைக்கும். இந்த நிலைக்குழு மசோதாவில் தேவைப்படும் திருத்தங்களைச் செய்யும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.
இந்நிலையில் லோக்பால் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் மட்டும் நடத்தினால் போதாது, அதை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது ஓட்டெடுப்பும் நடத்த வேண்டும் என்றும் புதிய நிபந்தனையை நேற்று காலை விதித்தார் ஹசாரே.
இதைத் தொடர்ந்து அன்னா தரப்புடன் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்றும் தொடர்ந்து பேச்சு நடத்தினார். அன்னா தரப்பு மிகவும் பிடிவாதம் பிடித்ததால், இந்த மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தத் தயார் என மத்திய அரசு திடீரென ஒப்புக் கொண்டது.
இதை அன்னா ஹசாரே தரப்பும் வரவேற்றது. மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி தருவதாக அன்னாவின் குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரவால் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அனைத்து எம்பிக்களும் அவையில் இருக்குமாறு காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் தங்களது எம்பிக்களையும் கூட்டணிக் கட்சி எம்பிக்களையும் கேட்டுக் கொண்டுள்ளன.
இதையடுத்து முதலில் ராஜ்யசபாவிலும் பின்னர் லோக் சபாவிலும் இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு சமர்ப்பித்து குரல் வாக்கெடுப்பு (மேசயைத் தட்டி) நடத்தியது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் அதன் நகலை எடுத்துக் கொண்டு அன்னா சார்ந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான விலாஸ் ராவ் தேஷ்முக் ராம்லீலா மைதானத்திற்கு விரைந்தார். தீர்மான நகலை அவரிடம் காட்டினார்.
இதையடுத்து அந்த நகலை கூட்டத்தினரிடம் காட்டி இந்திய மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று கூறி தனது போராட்டம் வெற்றி பெற்றதை அறிவித்தார் அன்னா ஹஸாரே. மேலும் தனது கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தான் நாளை அதாவது இன்று காலை 10 மணிக்கு உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அவர் அறிவித்தார். அதன்படி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹஸாரே.

கருத்துகள் இல்லை: