அதிபர் முஅம்மர் கத்தாஃபியை பதவியிலிருந்து அகற்ற கோரி போராட்டம் நடைபெறும் லிபியாவில் தலைநகரான திரிபோலியை கைப்பற்றுவதற்காக எதிர்ப்பாளர்களும், ராணுவத்தினரும் இறுதிப்போரை நடத்தி வருவதாக செய்திகள் கூறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பலத்த குண்டுச் சத்தம் கேட்டதாக நேரில் கண்டோரை மேற்கோள்காட்டி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலின் நோக்கமும், இழப்புகளும் தெரியவில்லை. ஒரே நேரத்தில் நகரத்தின் வடக்கு-கிழக்கு-தெற்கு-மேற்கு பகுதிகளிலிருந்து எதிர்ப்பாளர்கள் தாக்குதலை துவக்கியுள்ளனர்.
நேட்டோ ராணுவத்துடன் இணைந்து தாங்கள் தலைநகரில் லிபியாவின் ராணுவத்தை எதிர்கொள்வதாக பெங்காசியில் போராட்ட தலைவர் கர்னல் பழ்லுல்லாஹ் ஹாரூன் தெரிவித்துள்ளார்.
படகுகள் மூலமாக வெள்ளிக்கிழமை இரவு நகரத்திற்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் டெலிக்ராஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திரிபோலியின் கிழக்கு மாவட்டமான தஜூரியின் கட்டுப்பாட்டை ராணுவத்திடமிருந்து கைப்பற்றியதாக எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இங்குள்ள ராணுவம் தலைமையகம் எதிர்ப்பாளர்கள் வசம் உள்ளது. எதிர்ப்பாளர்களிடம் திரிபோலிக்கு வருமாறு தீவிரமான மொபைல் ஃபோன் செய்திகள் பரப்புரைச் செய்யப்படுகிறது.
லிபியாவின் போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக வெளிநாட்டு பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே நேற்று காலை தொலைக்காட்சியில் தோன்றிய கத்தாஃபி நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்க மேற்கத்திய நாடுகள் முயல்வதாக குற்றச்சாட்டை தொடர்ந்து எடுத்துவைத்தார். மக்கள் கூட்டத்தை தாக்கும் இந்த எலிகளை நாங்கள் துரத்தியிருக்கிறோம். தேர்தலில் வெற்றிப் பெற பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி நேட்டோ படையின் தலைமையில் லிபியாவில் விமானத் தாக்குதலை நடத்துகிறார். ஆக்கிரமிப்பு சக்திகளின் உதவியால் நாட்டை எண்ணெய் ஊற்ற அவர்கள் முயல்கிறார்கள். ஆனால், லிபியா மக்கள் அதற்கு வாய்ப்பளிக்கமாட்டார்கள் என கத்தாஃபி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் கத்தாஃபியின் வலது கரமாக செயல்பட்ட முன்னாள் பிரதமர் அப்துஸ்ஸலாம் ஜலூத் எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்துள்ளார். லிபியாவின் எண்ணெய் வளமிக்க நகரமான புரைகா, அஜ்தாபிய்யா, அஸ்ஸவிய்யா ஆகிய நகரங்களின் கட்டுப்பாட்டையும் எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
நான்கு மாத காலமாக தொடரும் போராட்டத்தில் இதுவரை நூற்றுக்கணக்கான பேர் உயிரிழைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக