வெள்ளி, செப்டம்பர் 16, 2011

பெட்ரோல் விலை உயர்வு- லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3.14 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ. 71.64 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று நள்ளிரவு
 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. கடந்த 4 மாதங்களில் இது இரண்டாவது விலை உயர்வாகும்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பதாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் இந்த விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய நிலை உருவானதாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இப்போது பெட்ரோல் விற்கப்படும் விலையால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.2.61 இழப்பு ஏற்படுவதாகவும், தினந்தோறும் ரூ.15 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெட்ரோலுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டது. இதனால் விலையை நிறுவனங்கள் நினைத்தபோதெல்லாம் உயர்த்தி வருகின்றன.
கடந்த மே மாதம்தான் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டது. ஜூன் மாதத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3ம், சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ.50ம், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்தப்பட்டது.
இந் நிலையில் பணவீக்க விகிதமும் உயர்ந்து வருகிறது. மேலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருவதால், சர்வதேச அளவில் பெட்ரோலியத்தை கொள்முதல் செய்ய இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலவிடும் தொகையும் அதிகரித்து வருகிறது.
இதனால் பெட்ரோல் விலையை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் இன்று மும்பையில் கூடி விவாதித்தனர். அதில் விலையை லிட்டருக்கு ரூ. 3.14 வரை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: