வகுப்புக் கலவரத்தைத் தொடர்ந்து நிரபராதிகளான ஏராளமான முஸ்லிம்கள் போலீசாரின் அராஜகத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பரத்பூரின் கோபால்கர் கிராமத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி திடீர் விஜயம் செய்துள்ளார்.
கோபால்கரில் கடந்த மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்தில் ஏராளமான அப்பாவிகள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறினார். மத்திய உள்துறை இணையமைச்சர் ஜிதேந்தர்சிங்கும் ராகுலுடன் வந்திருந்தார். கோபால்கர், மாலிகி, பிப்ரோலி ஆகிய பகுதிகளுக்கு சென்ற இருவரும் கலவரத்திலும், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் பலியானவர்களின் வீடுகளுக்கு சென்று சந்திப்பை நிகழ்த்தினர்.
வகுப்பு கலவரம் துவங்கியதாக கூறப்படும் கோபால்கரில் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு சென்ற ராகுல் மக்களிடம் அமைதிக்காக அழைப்பு விடுத்தார். பின்னர் எஸ்.பி.ஜி ராணுவ வீரரின் பைக்கின் பின்புறத்தில் அமர்ந்து பிப்ரோலி கிராமத்திற்கு சென்ற ராகுல் அங்கு கலவரத்தில் கொல்லப்பட்ட இக்பால் சிங்கின் வீட்டிற்கு சென்றார். ராகுலை கண்டவுடன் திரண்ட மக்கள் செப்டம்பர் 14-ஆம் தேதி நடந்த கலவரத்தைக் குறித்தும், துப்பாக்கிச் சூட்டைக் குறித்தும் அவரிடம் விவரித்தனர்.
நிலம் தொடர்பான தகராறு பரத்பூரின் இப்பகுதிகளில் முஸ்லிம்களுக்கும், குஜ்ஜார்களுக்கும் இடையே மோதலை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் வெறித்தனமாக ஒருதலை பட்சமாக முஸ்லிம்களை நோக்கி துப்பாக்கிச்சூட்டை நடத்தியது. துப்பாக்கிச் சூட்டிலும், கலவரத்திலும் 10 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கடும் எதிர்ப்பை சமாளிக்க ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு சம்பவத்தைக் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக