வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் போராட்ட மையமான ஜுக்கோட்டி பூங்காவில் போராட்டத்திற்கு அதிகமான மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையான உணவு வகைகள், போர்வை உள்ளிட்ட பொருட்கள் பூங்காவில் குவிந்துள்ளன. மக்கள் அளித்த பொருளாதார உதவி ஏறத்தாழ 3 லட்சமாக அதிகரித்துள்ளது. எதிர்ப்பாளர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவும், நேரடியாகவும் இவ்வளவு பெரிய தொகை அளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சமத்துவமின்மைக்கும், குத்தகை முதலாளிகளின் ஆதிக்கத்திற்கும் எதிராக துவங்கிய போராட்டம் நீண்டகாலம் தொடரும் என்பதற்கான அறிகுறிதான் மக்களின் ஆதரவு தெரிவிக்கிறது.
எதிர்ப்பாளர்கள் நீண்டகாலம் தங்குவதற்கு தேவையாக கிடைத்துள்ள பொருட்களை கவனமாக பாதுகாப்போம் என போராட்டட்த்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறினார்.
வால்ஸ்ட்ரீட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உலகமுழுவதும் போராட்டங்கள் சனிக்கிழமை நடந்தது. இது போராட்டக்காரர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
செப்டம்பர் மத்தியில் துவங்கிய போராட்டத்தில் இதுவரை 2000 பேரை அமெரிக்க போலீஸ் கைது செய்துள்ளது. இப்போராட்டத்திற்கு தலைமைத்தாங்க ஒரு குறிப்பிட்ட தலைவரை சுட்டிக்காட்ட முடியாது எனினும், ஒரு லட்சியத்திற்காக பல்வேறு சிந்தனைகளை கொண்டவர்கள் கைக்கோர்ப்பதை காணமுடிகிறது. அதேவேளையில் போராட்டம் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலிலும் முக்கிய பிரச்சாரமாக மாறி உள்ளது.
வாஷிங்டன் டி.சியில் நேற்று முன் தினம் நடந்த போராட்டத்திற்கு இடையே அமெரிக்க சிந்தனையாளரும், மனித உரிமை ஆர்வலருமான கார்னல் வெஸ்டை போலீஸார் கைது செய்தனர்.
ஃப்ரீடம் ப்ளாசாவிலிருந்து துவங்கிய போராட்டம் உச்சநீதிமன்றத்தின் முன்னால் வந்தடைந்தபொழுது ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளருமான வெஸ்ட் உள்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே ஐக்கியத்தையும், போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் விளக்க அமைப்பாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கியுள்ளனர். வெர்ஜீனியாவில் இத்தகைய நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக