அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ். முழு ஆதரவு அளித்து வந்துள்ளதாக அதன் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பதை ஹசாரே மறுத்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரே, டெல்லியில் கடந்த மார்ச், ஆகஸ்ட் மாதங்களில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு கிடைத்தது. அப்போது, அன்னாவின் போராட்டத்தை ஆர்எஸ்எஸ் போன்ற சங்பரிவார் அமைப்புகள் இயக்கி வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார். இதை அன்னா கடுமையாக மறுத்தார்.
இந்நிலையில், நாக்பூரில் நேற்று முன்தினம் தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “நாட்டு நலனுக்காக அன்னாவின் போராட்டங்களில் நாம் தீவிரமாக பங்கெடுத்தோம். ஊழலை ஒழிக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம்” என்றார்.
பகவத்தின் இப்பேச்சுக்கு ஹசாரே மறுப்பு தெரிவித்துள்ளார். “ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்த ஒரு தொண்டர் கூட என்னை சந்தித்தது கிடையாது. அப்படி இருக்கும்போது, பகவத் எப்படி இதுபோல் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.” என்று அன்னா கூறினார்.
திக் விஜய் தாக்கு: போபாலில் திக்விஜய் சிங் நேற்று அளித்த பேட்டியில், “ஹசாரே போராட்டத்துக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு கொடுக்கிறது. போராட்டத்தில் அதன் ஆதரவாளர்கள் பங்கேற்கின்றனர் என்று பலமுறை குற்றம் சாட்டினேன். அதற்காக நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். இப்போது மோகன் பகவத் பேசிய பேச்சு, நான் கூறியது உண்மை என்பதை நிருபித்துவிட்டது” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக