ஊழலின் பெயரால் ஹஸாரே நடத்தும் போராட்டம் பிராமணவாதம் என பிரபல சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பாக அக்னிவேஷ் கூறியதாவது: ‘ஹஸாரே குழுவில் ஜனநாயகம் இல்லை. எதிர் கருத்துக்களை புறக்கணிக்கும் அணுகுமுறைதான் ஹஸாரேவுக்கு சொந்தமானது. ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலையீடு அதிகமாக உள்ளது.
இதற்கு தடை விதிக்க முஸ்லிம்-தலித் பிரிவினரை போராட்டத்தில் கலந்துக்கொள்ளச் செய்யவேண்டும் என நான் வாதிட்டேன். ஆனால், அனைவரையும் ஒரேபோல காண்பதற்கு ஹஸாரே தயாரில்லை.
ஹஸாரே நடத்திய ஜந்தர்மந்தர் போராட்டத்திலோ, ராம்லீலா போராட்டத்திலோ முஸ்லிம்களையோ, தலித்துகளையோ காணமுடியவில்லை. ஹஸாரேயின் போராட்டம் பிராமணவாதம் மட்டுமே. ஹஸாரே குழுவில் அனைத்தையும் தீர்மானிப்பது ஹஸாரேயும், அரவிந்த் கேஜ்ரவாலும் மட்டுமே.
ஜனநாயகம் ஹஸாரேயின் வழியல்ல. ஆகையால்தான் ஹஸாரேயின் சொந்த மாநிலமான மஹாராஷ்ட்ராவிலிருந்து அவருடைய உண்ணாவிரதப் போராட்டத்திலோ, இதர போராட்டங்களிலோ பங்கேற்க பிரபல சமூக ஆர்வலர்கள் எவரும் கலந்துக் கொள்ளவில்லை.
ஹஸாரேயை ஆராதனைப் புருஷனாக மாற்றி இரண்டாவது காந்தியாக சித்தரித்த வேளையிலும், ‘இந்தியால் என்றால் அன்னா’ என்ற முழக்கத்தை எழுப்பிய பொழுதும் நான் எதிர்த்துள்ளேன். ஆனால் பிறர் இதனை ஆதரித்தனர்.’ இவ்வாறு அக்னிவேஷ் கூறியுள்ளார்.
அக்னிவேஷ் முன்பு ஹஸாரே குழுவில் முக்கிய நபராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக