திங்கள், அக்டோபர் 31, 2011

ஒளிரட்டும் பேரூராட்சி!

தமிழ்நாட்டின்  முக்கிய அரசியல் கட்சிகள் தனித்து  போட்டியிட பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடந்த முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் அ.தி.மு.க வின்  அசுர வெற்றி கருத்து கணிப்புகளையும் தாண்டியதே.ஆளும் கட்சியாக அ.தி.மு.க இருந்ததால் அக்கட்சியின் உறுப்பினர்கள்  பத்து மாநகராட்சிகளிலும் வெற்றி பெறுவது எளிதாகவே இருந்தது. பெரும்பாலான மாநகராட்சி வார்டுகளிலும் அக் கட்சியின் உறுப்பினர்களே வெற்றி பெற்றிருந்ததால் அந்தந்த மாநகராட்சிகளின் துணைமேயர் பதவிகளையும் அ.தி.மு.க வே தக்க வைத்துக் கொண்டது.

ஆனால்  பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கட்சிகளை விட சுயேச்சை வேட்பாளர்களுக்கே மவுசு அதிகம் என்பது இந்த தேர்தலிலும் நிருபிக்கப்பட்டிருக்கிறது. நமதூர் போன்ற பல பேரூராட்சிகளிலும்,ஊராட்சிகளிலும் கட்சி அடிப்படையில் அல்லாது, தேர்தலில் போட்டியிட்டவர்களின் நற்பெயருக்கே ஓட்டுகள் விழுந்துள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று பின்பு தி.மு.க வில் இணைந்த முஹம்மது யூனூஸ்-அவர்களுக்கு இந்த உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த ஓட்டுக்களும் அதன் அடிப்படையிலேயே என்றால் அது மிகையல்ல. சிறந்த நிர்வாகத் திறமையோடு, சிற்சில குறைபாடுகளை  தவிர அனைத்து தரப்பினரின்  தேவைகளையும் நிறைவேற்றி கடந்த முறை நல்லதொரு உள்ளாட்சி நிர்வாகத்தை  நடத்தியதற்கு  பரிசாகவே முஹம்மது யூனூஸ் அவர்களை இந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர்.
 
அந்த வகையில்  17-வது வார்டு கவுன்சிலர் நட்ராஜ் அவர்களும் இங்கு குறிப்பிடத்தக்கவர்.மூன்று முறையும் சுயேட்சையாகவே போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது தன்னை தி.மு.கவில் இணைத்து கொண்டு பேரூராட்சித் துணைத் தலைவர் ஆகி இருக்கிறார். ஆக ஒரு வகையில் இதுவும் கூட சுயேச்சைகளின் நிர்வாகத்தில் உள்ள பேரூராட்சியே.

தற்போது தி.மு.க வில் இருந்தாலும், ஆளுங்கட்சியோடு அனுசரித்து, நம்பி ஓட்டு போட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றி கடந்த முறையை விட இன்னும் சிறப்பாக செயலாற்றி தலைவரும்,துணைத் தலைவரும் பரங்கிப்பேட்டை பேரூராட்சியை ஒளிரச் செய்வார்கள் என  நம்புவோம்!

Source: Mypno

கருத்துகள் இல்லை: