புதன், நவம்பர் 23, 2011

பரங்கிப்பேட்டையில் 4 புதிய வண்ண இறால்கள கண்டுபிடித்து சாதனை!

லட்சத்தீவில், நான்கு வகையான வண்ண இறால்களை, பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 பரங்கிப்பேட்டையில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் நிதியுதவியுடன், லட்சத்தீவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆராய்ச்சியின் போது,

 அங்கு நான்கு வகையான வண்ண இறால்களை, ஆராய்ச்சி மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.ஆராய்ச்சி மைய முதுநிலை அதிகாரி அஜீத்குமார் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களை, அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமநாதன் பாராட்டினார்.இதுகுறித்து அஜீத்குமார் கூறியதாவது:நான்கு ஆண்டுகளாக, லட்சத்தீவில் அகாத்தி எனும் இடத்தில் வண்ண மீன் பொரிப்பகத்தை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு நான்கு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதன் மூலம் டாடா குழுமம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், உற்பத்தி செய்த மீன் குஞ்சுகளை டாடா நிறுவனமே நல்ல விலை கொடுத்து வாங்கிச் செல்கிறது.கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய புல முதல்வர் பாலசுப்ரமணியன் அறிவுறுத்தலின் பேரில், லட்சத் தீவில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை மதிப்பீடு செய்யும் பணியும் நடந்து வருகிறது. தற்போது ஆராய்ச்சி மாணவர்கள், நான்கு வகையான வண்ண இறால்களை கண்டுபிடித்துள்ளனர்.

பல ஆராய்ச்சி நிறுவனங்கள், வெவ்வேறு காலக்கட்டங்களில் இப்பகுதியில் ஆராய்ச்சி மேற்கொண்ட போதும், இதுபோன்ற வண்ண இறால்கள் கண்டறியப்படவில்லை.இந்த வண்ண இறால்களுக்கு, உலக வண்ணமீன் சந்தையில் தேவை அதிகம் இருப்பதால், லட்சத்தீவில் உள்ள பல்கலைக் கழக ஆராய்ச்சிக் கூடத்தில் பராமரித்து உற்பத்தி செய்வதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்த மையம் ஏற்கனவே வண்ண மீன்கள் உற்பத்திக்கான தொழில் நுட்பத்தை தயாரித்துள்ளதால், வண்ண இறால்களையும் உற்பத்தி செய்வது எளிதானது.இவ்வாறு அஜீத்குமார் கூறினார்.

நன்றி: தினமலர்
 

கருத்துகள் இல்லை: