இந்தியாவிலிருந்து இங்கிலாந்தையும் பிரான்சையும் சொந்த நாடாக்கிக் கொண்ட திரு. ராஜாராவ் என்ற ஒரு இந்தி நாவலாசிரியருக்கும்
நேருவுக்கும் ஜெர்மனியில் 1930 இல் நடைபெற்ற ஒரு உரையாடல் பற்றி, பிரபல அமெரிக்க எழுத்தாளரான லூயி ஃபிஷர் ஜான்டே கம்பெனியார் நேருவுக்கு வெளியிட்ட புகழாஞ்சலி நூலக்கு எழுதியுள்ள விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அப்பொழுது திரு.ஜவகர்லால் நேரு அவர்களது துணைவியார் உடல் நலங்குன்றி அய்ரோப்பாவில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தார்.
திரு. ராஜாராவ் நேருவிடம் இந்தியாவைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் பேசிக் கொண்டு வரும் பொழுது, அதில் உள்ள மகாத்மியங்களின் பெருமைகளைக் கூறினார். இது நேருவுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது.
உடனே நேரு, நீங்கள் எப்போதும் இப்படித்தான் பேசுவீர்களா? என்று வியப்புடன் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த திரு. ராஜாராவ், நீங்கள் ஏதாவது ஒன்றை நம்புகிறீர்கள் அல்லவா? எந்த ரூபத்திலாவது கடவுளை நம்புகிறீர்கள் அல்லவா ? என்றார்.
கடவுளா? என்ன கடவுள்? என்று நேரு மிகவும் ஆத்திரத்துடன் கேட்டுவிட்டு, கடந்த 3000 ஆண்டுகளாக அந்தக் கடவுள் நம்மை எங்கே கொண்டு போய்ச் சேர்த்தது? அடிமைத்தனம், வறுமை இதுதானே இங்கு மிஞ்சியது? என்று பளிச்சென்று பதில் சொன்னார்.
இத்தகவல் 26-2-1966 சுயராஜ்யா இங்கிலீஷ் வார ஏட்டில் நேரு பாரம்பரியம் என்ற தலைப்பில் ஆச்சாரியார் அவர்களால் கையொப்பமிட்டு எழுதப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேருவை கடவுள் எதிர்ப்பாளர், மத எதிர்ப்பாளர் என்று வலுக்கட்டாயமாகக் காட்டுவதற்கு இந்தத் தகவலை இங்கு எடுத்துக் காட்டவில்லை.
நேரு போன்றவர்களை ஆச்சாரியார் எப்படி பார்க்கிறார் என்பதற்காகத்தான் அதன் சாயத்தை நனைத்துப் பிழியத்தான் இதை இங்கு எடுத்துக் காட்டுகிறோம்.
10-4-1976 அன்று வெளிவந்த அந்த ஏட்டில் முதல் பக்கக் கடிதத்தில் தாங்கள் தீவிர சோஷ லிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்ள விரும்பும் சிலர் மத நம்பிக்கை மூடத்தனமானது என்று சொல்லுவது பழக்கமாக இருந்து வந்திருக்கிறது என்றும், இந்து மதம் லவுகீகத்தைப் போதிக்கிறது; அரசியலைப் போதிக்கிறது.
கார்ல்மார்க்சும், லெனினும் சொன்னதை விட தீவிரமான சோஷலிசத்தையும் போதிக்கிறது. அதனாலேதான் மத நம்பிக்கை இல்லாத தீவிரவாதிகள் இந்தியாவில் வளர முடிந்ததில்லை என்றும் முற்றும் கரைத்துக் குடித்த மேதாவிலாசம் போல எழுதியது. அந்த ஏட்டின் கூற்றுப்படி மத மறுப்பாளராக நேரு சோசலிஸ்டு இல்லையா- இவர் இந்தியாவில் வளர முடியவில்லையா?
– மயிலாடன் (விடுதலை நாளிதழ்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக