சிதம்பரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 4 டாஸ்மாக் மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளரும், துணை ஆட்சியருமான தி.காசிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடித விபரம்: சிதம்பரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் செல்லும் குறுகலான தெருவான லால்கான் தெருவில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை (எண்:2408) உள்ளது. மேலும் சேத்தியாத்தோப்பு, கந்தகுமாரன் ஆகிய கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ் செல்லும் வழியில் உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
இதேபோன்று காய்கறி மார்க்கெட் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையால் (எண்:2404) அவ்வழியே பெண்கள் மற்றும் சிறு, குறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல இடையூறாக உள்ளது.
மேலவீதி பஸ் நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையினால் (எண்: 2407) பஸ்சுக்கு காத்திருக்கும் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதேபோன்று சிதம்பரத்திலிருந்து கவரப்பட்டு செல்லும் சாலையில் உள்ள சிவபுரி டாஸ்மாக் மதுபானக்கடை (எண்: 2531) பஸ் நிறுத்தம், மக்கள் குடியிருப்பு அருகே உள்ளது. இதனால் ஏற்படும் சண்டை, சச்சரவுகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே மேற்கண்ட 4 கடைகளையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற இடம் தேர்வு செய்து முன்மொழிவுகளை அனுப்பி வைக்குமாறு கடை மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சரியான இடம் கிடைத்தவுடன் அவை இடமாற்றம் செய்யப்படும் என, சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனுக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தி.காசி பதில் அனுப்பியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக