"தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றும் ம.தி.மு.க., 2011ல் நடக்கும் தமிழகம், புதுவை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இல்லை' என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ம.தி.மு.க.,வுக்கு 12 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்பதில் அ.தி.மு.க., திட்டவட்டமாக இருந்ததால் அக்கூட்டணியில் நீடிப்பது குறித்த இறுதி முடிவெடுப்பதற்கு ம.தி.மு.க.,
உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச்செயலர்கள் கூட்டம், தாயகத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய நடந்தது. ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், 56 மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர். கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி மலர்ந்த சம்பவங்களையும், 35 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது, திருமங்கலம் இடைத்தேர்தலில் அத்தொகுதியை அ.தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுத்தது, 2009ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த அவமான நிகழ்வுகளையும் வைகோ விவரித்தார்.
மேலும், வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன் முதல் கட்டமாக 35 தொகுதிகளும், இரண்டாவது கட்டமாக 30 தொகுதிகளும், மூன்றாவது கட்டமாக 21 தொகுதிகளும் ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையை பற்றியும் வைகோ தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தரப்பில் ஆறு தொகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு பின், எட்டு தொகுதிகள், ஒன்பது தொகுதிகள் என அதிகரித்து இறுதியாக 12 தொகுதிகள் வரை தருவதற்கு நடத்திய பேரத்தையும், வைகோ ஆவேசமாக விளக்கி பேசினார்.தொகுதி பங்கீட்டில் ம.தி.மு.க.,வை அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டு புறக்கணிப்பதாக அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.
ம.தி.மு.க., கொள்கைப் பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் பேசும்போது, அ.தி.மு.க., தலைமையை கடுமையாக விமர்சித்தார். தலைவர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ப மாவட்டச்செயலர்கள் 48 பேர், "அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற வேண்டாம்' என, தெரிவித்தனர்.
ஒரு சிலர் மட்டும் ம.தி.மு.க.,வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அ.தி.மு.க., தரும் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து பேசினர். அவர்களுக்கு வைகோ பதிலளித்து பேசும்போது, "நீங்கள் விரும்பினால் போட்டியிடுங்கள். நான் தொகுதிகளை கேட்க மாட்டேன். பிரசாரத்திற்கு வரமாட்டேன். என்னை அவமானப்படுத்தி விட்டனர். தேர்தலில் செலவு செய்வதற்கும் நமது கட்சியில் பணம் இல்லை' என்றார்.அதிகாலையில், ஐந்து பக்கம் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், "புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்து போட்டியிடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு ம.தி.மு.க., கருவியாயிற்று என்ற துளியும் உண்மை அற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும். கண்களை விற்று சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை ம.தி.மு.க., வுக்கு இல்லை. தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றும் ம.தி.மு.க., 2011ல் நடக்கும் தமிழகம், புதுவை சட்டசபை பொதுத்தேர்தலில் மட்டுமே போட்டியிடுவது இல்லை' என, அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் சில மாவட்டச்செயலர்கள், "தேர்தலில் புறக்கணிப்பு என்ற முடிவு ஏற்புடையதல்ல. மாவட்டத்தில் கட்சிக்காரர்கள், உறவினர்கள், பொதுமக்கள் கேட்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் ஏதாவது ஒரு காரணத்தின் அடிப்படையில் நமக்கு தோல்வி தான் ஏற்படுகிறது' என, கண்ணீர் விட்டு அழுதுகொண்டே தங்களது ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
உட்கட்சி பூசல், நிதி நெருக்கடியா-ம.தி.மு.க., தேர்தல் புறக்கணிப்பு மர்மம் : அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க., வெளியேறியதற்கு உட்கட்சி பூசல், நிதி நெருக்கடி மற்றும் சில முக்கியக் காரணிகள் உண்டு என, கூறப்படுகிறது.
தி.மு.க.,வில் போர்ப்படை தளபதி என்றழைக்கப்பட்ட வைகோ, கருத்து வேறுபாடுகளால் வெளியேறி ம.தி.மு.க.,வை துவக்கினார். 1996ல் தனித்து போட்டியிட்ட ம.தி.மு.க., 5.78 சதவீத ஓட்டுகளை பெற்றது. 2001 தேர்தலில் 211 இடங்களில் தனித்து போட்டியிட்டு 4.65 சதவீத ஓட்டுகள் பெற்றது.பின், 2006 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் தொகுதி பிரச்னையால், கடைசி நேரத்தில் விலகி, அ.தி.மு.க., கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், ஆறு இடங்களில் வெற்றி பெற்று 5.98 சதவீத ஓட்டுகளை பெற்றது.இதையடுத்து, லோக்சபா தேர்தலில் நான்கு இடங்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. பின், திருமங்கலம் தொகுதி ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்ற போதும், அதில் அ.தி.மு.க.,வே போட்டியிட்டது.
ம.தி.மு.க.,வுக்குரிய கம்பம், தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தது. இதனால், ம.தி.மு.க., ஓரங்கட்டப்படுகிறதோ என, அந்தக் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். தற்போது சட்டசபை தேர்தலில் 21 தொகுதிகளை கேட்ட ம.தி.மு.க.,வுக்கு 6, 7, 8, 12 என, சீட் பேரம் இழுபறி நிலையாகி, கடைசியில் அக்கூட்டணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட கட்சியானது.இம்மாதிரி வைகோ எடுத்த முடிவு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி ம.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தன்மானத்திற்காக வைகோ முடிவெடுத்தாலும், அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக்குறி உள்ளது. ம.தி.மு.க., சரிவுக்கு உட்கட்சி பூசல் தான் முக்கிய காரணம். ஏனெனில், பதவி மற்றும் முக்கியத்துவம் தந்த பலர், அடுத்த கட்சிக்குத் தாவி அங்கு பதவி பெறுவது வழக்கமாகி விட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் மாசு கட்டுப்பாட்டு விதிகள் கடைபிடிக்காததால், வைகோ ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆலையை மூட வைத்தார். இதில், பெங்களூரைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர் ஒருவர் தலையிட்டு சமாதானம் பேசியும், வைகோ பணியாததால், அ.தி.மு.க., தலைமை மூலம் நெருக்கடி கொடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் பிரச்னையை எழுப்பிவிட்டு, அது ஓய்வுற்ற பின்னும் அதை மீண்டும் மீண்டும் தோண்டுவது அவர் பாணி அரசியல் . இதுவும் விரிசலுக்கும், மனக் கசப்புக்கும் ஒரு காரணம்.
பொதுவாக அவர் விடுதலைப் புலிகள் ஆதரவு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டதில் இருந்து, அவருக்கு ஜனநாயக அடிப்படையில் ஆதரவு தந்த பலரும் சற்று விலகிக் கொண்டனர். இன்று தேர்தல் நேரத்தில் அவருக்கு அனைத்தும் பாதகமாகி விட்டது.இனி அடுத்த தேர்தலில் போட்டியிட்டு, குறைந்த பட்ச சதவீத ஓட்டுகள் அல்லது சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் பெறுவது என்பது எப்படி? அதுவரை தொண்டர்களை எப்படி ஊக்குவிப்பது என்பது, இன்று எழுந்திருக்கும் கேள்வி.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக