லிபியாவின் ஏகாதிபத்திய அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் சொந்த நகரான ஸிர்த்தை மீட்டதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் வெற்றியை ஈட்டியதாக எதிர்ப்பாளர்களின் தேசிய கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஷம்ஸி அப்துல் மொலாஹ் தெரிவித்துள்ளார்.
பெங்காசியில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எதிர்ப்பாளர்கள் தங்களது வெற்றியைக் கொண்டாடினர். அதேவேளையில், ஸிர்த்தில் கத்தாஃபியின் ராணுவம் தாக்குதலை பலப்படுத்தியதாக செய்திகள் கூறுகின்றன.
மிஸ்ரத்தாவில் கத்தாஃபியின் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். பின் வாஜிதிற்கு மேற்கிலுள்ள நவ்ஃபலியாவிலும் மோதல் கடுமையாக நடக்கிறது. ஸிர்த் அரசு கட்டுப்பாட்டிலுள்ளதாக நேரடி சாட்சிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
பல நகரங்களிலும் மோதல் தொடர்கிறது. மேற்கத்திய ராணுவம் நடத்தும் தாக்குதலின் பின்னணியில் எதிர்ப்பாளர்கள் லிபியாவின் 5 கடற்கரை நகரங்களை நேற்று முன்தினம் கைப்பற்றியிருந்தனர்.
திரிபோலியில் நேற்று மேற்கத்திய படையினர் கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலியன்கள் இறந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லிபியாவில் மேற்கத்திய நாடுகளின் தாக்குதலுக்கான அனைத்து பொறுப்பையும் நேட்டோ ஏற்றுக்கொண்டது. அரபு நாடுகள் உள்பட நேட்டோ பிரதிநிதிகள் அனுமதியளித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை என நேட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லிபியாவில் எதிர்ப்பாளர்களின் அரசை கத்தர் அங்கீகரித்துள்ளது. லிபியாவில் மக்கள் வாழும் பகுதியில் குண்டுவீசுவதற்கு கூட்டுச் சேரமாட்டோம் என துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகான் தெரிவித்துள்ளார்.
மேம்பட்ட வசதிகளை உருவாக்குவதற்காக பெங்காசி விமானநிலையத்தின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கத்தாஃபியின் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.நாவின் தீர்மானம் அனுமதியளிக்கவில்லை என ரஷ்யா கூறியுள்ளது. லிபியாவின் உள்நாட்டு போரில் தலையிடுவது ஐ.நாவின் தீர்மானத்தை மீறுவதாகும் என ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸெர்ஜீ லாவ்ரோவ் விமர்சித்துள்ளார்.
சிவிலியன்களை பாதுகாப்போம் எனக் கூறிவிட்டு கத்தாஃபியின் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவது சரியல்ல. வெளிநாட்டு ராணுவத்தின் தாக்குதலில் சிவிலியன்கள் கொல்லப்பட்ட தகவலின் உண்மை நிலையை வெளியிட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
இதற்கிடையே லிபியாவின் தலைநகரில் அமைந்துள்ள ரிக்ஸஸ் ஹோட்டலுக்கு வந்து, தன்னை ராணுவத்தினர் கூட்டு வன்புணர்வுச் செய்ததாக தெரிவித்த இளம்பெண் ஒருவரை ராணுவம் இழுத்துச் சென்றுள்ளனர். வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் முன்பு இச்சம்பம் நடந்துள்ளது. ஒரு செக்போஸ்டிற்கு அருகில் வைத்து 15க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் தன்னை கொடூரமாக கூட்டு வன்புணர்வுச் செய்த தகவலை பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பதற்கு அப்பெண்மணி வந்திருந்தார். வன்புணர்வுக்குப் பிறகு ராணுவம் தன்னை சிறையிலடைத்ததாகவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 4 ராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக