இந்தியா-பாகிஸ்தான் உள்துறைச் செயலாளர்கள் நேற்று புதுடெல்லியில் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஐந்து மணிநேரம் நீண்ட பேச்சுவார்த்தை பயனுள்ளதாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் அமைந்தது என இந்தியா-பாகிஸ்தான் உள்துறை செயலாளர்களான ஜி.கே.பிள்ளையும், சவ்தரி கமருஸ்ஸமானும் அறிவித்தனர்.
2008 ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து நிலைத்துப்போன நட்புறவுக்கான சமாதான முயற்சிகள் மீண்டும்
துவக்குவதற்காக நடந்த பேச்சுவார்த்தை 5 மணிநேரம் நீண்டது.
மும்பை தாக்குதல் வழக்கு,எல்லை தாண்டிய பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், கள்ளநோட்டுப் புழக்கம் குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததாகத் தெரிகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் ஜி.கே.பிள்ளை கூறியதாவது:
“பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்திருந்தது. பேச்சு சரியான திசையில் செல்வதாகவே கருதுகிறேன். இப் பேச்சு தொடர்பான கூட்டறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்றார்.
செய்தியாளர்களிடம் கமார் ஜமான் கூறியதாவது:
“பேச்சுவார்த்தை சுமுகமாகவும், சரியான திசையிலும் அமைந்திருந்தது. இன்னும் ஒரு நாள் பேச வேண்டியுள்ளதால் குறிப்பான விவரங்கள் எதையும் இப்போது கூற முடியாது. எனினும், இருதரப்புமே ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டுள்ளோம்.
செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தையும் சுமுகமாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்னும் பல விஷயங்கள் குறித்து பேச வேண்டியுள்ளது. முதல் நாள் பேச்சுவார்த்தை பலன் அளிப்பதாக இருந்தது” என்றார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் புதன்கிழமை மோதுகின்றன.
மொஹாலியில் நடைபெறும் இந்த ஆட்டத்தைக் காண வருமாறு பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி ஏற்றுக் கொண்டுள்ளார்.
கிரிக்கெட் ஆட்டத்துக்கு முன்போ,பின்போ இருவரும் சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இருவரும் பேசுவது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில்,உள்துறைச் செயலர்கள் அளவிலான பேச்சு நடைபெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக