தில்குஷா காலனியில் வசிக்கும் ஆயிஷா பீவிக்கு 4 பிள்ளைகள். அவர்களில் 3 பேர் பெண்கள். தெருக்களில் செருப்புகளை பொறுக்கி அதிலிருந்து தோலை பிரித்தெடுப்பதுதான் அவர்களின் பணி. இரவு பகலாக உழைத்தாலும் ஒரு நாளைக்கு கிடைப்பதோ அறுபது ரூபாய் மட்டுமே.ஷீட்டுகளால் மறைக்கப்பட்டதுதான் அவர்களது வீடு.
தலித்துகளை விட மோசமான வாழ்க்கை சூழலுக்கு சொந்தக்காரர்கள் என சச்சார் கமிட்டியால் அழைக்கப்பட்ட, புழுக்களைப் போல் வாழ்க்கையை
கழிக்கும் முஸ்லிம்களை காண்பதற்கு கொல்கத்தாவிலிருந்து 200 கி.மீ தொலைவிலுள்ள முர்ஷிதாபாத்துக்கு செல்ல தேவையில்லை.
மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவின் இதயப் பகுதியில் அமைந்திருக்கும் பார்க் சர்க்கஸின் முஸ்லிம் தெருக்களுக்கு அப்பால் வாருங்கள். அதுதான் தில்குஷா காலனி.
பெயரைப் போல அழகானதல்ல அக்காலனியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை. ஷீட்டுகளால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள். அதற்கு உள்ளே புழுக்களைப் போல பல மனிதர்கள். 500 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றனர். ஒரு குடும்பத்தை தவிர அனைவரும் இக்காலனியில் முஸ்லிம்களாவர்.
காலனியில் குடிநீர் இல்லை. மின்சாரமும் இல்லை. குப்பைகளை பொறுக்குவதுதான் இக்குடும்பங்களில் ஒரு பிரிவினரின் பணி. வேறு சிலரோ தையல் வேலைப் பார்க்கின்றனர். கடினமாக உழைத்தாலும் 50 ரூபாய்தான் ஒருநாளைக்கு கிடைக்கிறது.
இக்காலனியைப் பொறுத்தவரை சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்தாம் பணக்காரர். அவர்களுக்கு சில தினங்களில் 100 ரூபாய் வரை கிடைக்கும். காலனியில் வசிக்கும் குழந்தைகளில் 5 சதவீதம்பேர் கூட பள்ளிக்கூடம் செல்வதில்லை. ஐந்தாம் வகுப்புதான் இக்காலனியில் உயர்ந்த கல்வி.
தில்குஷா காலனியில் வசிக்கும் ஒரேயொரு கிறிஸ்தவக் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகள் சிறந்த கல்வியை அளிக்கும் கிறிஸ்தவ மிஷினரி பள்ளிக்கூடத்தில் பயில்கின்றனர். அக்குடும்பத்தின் மூத்த பெண்ணிற்கு கிறிஸ்தவ நிறுவனத்தில் வேலை. முஸ்லிம்களுக்கோ ஒன்றுமில்லை.
காலனியில் இரண்டு வீடுகளுக்கிடையேயான தூரம் நான்கு இஞ்ச் மட்டுமே. இரண்டு வீடுகளுக்கு ஒரே ஷீட்டை சுவராக மாற்றியவர்களும் உண்டு. கழிவு நீர் வீடுகளின் முன்னால் ஓடுகிறது. ஆனாலும்,இந்த அசெளகரியங்களை காசாக மாற்றுவது அரசுக்கு கைவந்த கலையாகும்.
அரசு காலனியையொட்டி காசு கொடுத்து உபயோகிக்கும் கழிவறைகளை கட்டியுள்ளது. காலனிவாசிகளுக்கு தங்களுக்கு கிடைக்கும் அற்ப வருமானத்தில் ஒரு பகுதியை செலுத்தி இதனை பயன்படுத்துகின்றனர்.
வீடுகளுக்கு இடையே அமைந்துள்ள பொதுவழிக்கு ஒரு மீட்டர் கூட அகலம் இல்லை. காலனியில் பாதிபேருக்கு ரேசன் கார்டு கிடையாது. ஆனால், அனைவருக்கும் வாக்காளர் அட்டை உண்டு. தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் கட்சியினர் இங்கு வருவர். காலனியை காலிச் செய்துவிடுவோம் என மிரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க நிர்பந்திக்கிறது. இல்லாவிட்டால், சட்டத்திற்கு புறம்பாக வங்காளதேசத்திலிருந்து குடியேறியவர்கள் என முத்திரைக்குத்தி சிறையிலடைத்துவிடுவோம் என அச்சுறுத்துகின்றனர்.
தெருவில் நேராக நடந்தால் தில்குஷா காலனியை விட மோசமான இன்னொரு காலனி உண்டு. அதன் பெயர் டாலாவாடா. இங்கு வசிப்பவர்களும் முஸ்லிம்களே. ராஜாபஸார், ஃபுல்வகன், பனியபுக்கூர், தோப்ஸியா உள்பட கொல்கத்தாவில் மிகவும் அருவருப்பான காலனிகளில் வசிப்பவர்களும் முஸ்லிம்களே.
இந்நாட்டின் சுதந்திரத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட முஸ்லிம்களின் வாரிசுகள் இன்று இரண்டாந்தர குடிமக்களாகவும், வாக்கு வங்கிகளாகவும் நடத்தப்படக்கூடிய சூழலில் முஸ்லிம் சமுதாயம் எப்பொழுதுமே பிறரிடம் கையேந்தி நிற்கும் சூழலை மாற்றிவிட்டு சுயமாக பலம்பெற்று இந்திய தேசத்தின் அதிகார மையங்களில் பங்கேற்கும் வரை இம்மாதிரியான அநீதிகள் ஒழியாது என்பதுதான் உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக