சனி, மார்ச் 26, 2011

முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதில் அதீத கவனம் செலுத்த வேண்டும் – மக்கா இமாம்


முஸ்லிம்கள் பரஸ்பரம் ஐக்கியமாக செயல்படுவதில் அதீத கவனம் செலுத்த வேண்டுமென மக்காவில் மஸ்ஜிதுல் ஹராமின் தலைமை இமாம் அப்துல் ரஹ்மான் ஸுதைஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமிய கல்விக் கலாச்சாலையான தேவ்பந்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுற்றஷீதில் நேற்று ஜும்ஆ தொழுகைக்கு தலைமை வகித்து உரை நிகழ்த்தினார் மக்கா இமாம்.
அவர் தனது உரையில், இந்திய முஸ்லிம்கள் உலகிற்கு அளித்த நன்கொடைகள் மிகவும் மகத்துவமானது. இந்தியாவில் முஸ்லிம்கள் நூற்றாண்டுகளாக பாதுகாத்துவரும் மகத்தான மார்க்க உணர்வு அதி உன்னதமானது என இமாம் குறிப்பிட்டார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைத்தந்த 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நேற்றைய ஜும்ஆவில் பங்கேற்றனர்.

மக்கா இமாமிற்கு தாருல் உலூம் தேவ்பந்தில் மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜும்ஆ தொழுகைக்கு தலைமை வகிக்க வந்த மக்கா இமாமிற்கு ஜம்மியத் உலமாயே ஹிந்த் தலைவர் மவ்லானா அர்ஷத் மதனி, தேவ்பந்தின் தலைவர் மவ்லானா குலாம் முஹம்மது வஸ்தான்வி, மவ்லானா அபுல் காஸிம் பனாரஸி ஆகியோர் வரவேற்றனர்.
டெல்லியில் சவூதி தூதர் ஃபைஸல் ஹஸன் துவாரஸ், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சுல்தான் அஹ்மத், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனும் தற்போதைய காங்கிரஸ் கட்சி எம்.பியுமான முஹம்மது அஸாருதீன் ஆகியோர் டெல்லியில் இமாமுக்கு வரவேற்பளித்தனர்.
மாலை நான்கு மணிக்கு இமாமிற்கு கெளரவமளிக்கும் வகையில் பாராளுமன்ற இணைக்கட்டிடத்தில் வைத்து இரவு விருந்து அளிக்கப்பட்டிருந்தது.  மத்திய அமைச்சர்களான குலாம் நபி ஆசாத், இ.அஹ்மத் ஆகியோர் இவ்விருந்தில் பங்கேற்றனர். ரெயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் நினைவுப் பரிசை சுற்றுலாத்துறை அமைச்சர் சுல்தான் அஹ்மத் மக்கா இமாமிடம் அளித்தார்.

கருத்துகள் இல்லை: