சனி, மார்ச் 26, 2011

இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: ஜெ., புது வாக்குறுதி

கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்கள் இடம்பெறாத வகையில் திருத்தியமைக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி அமைத்தால், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தி அறிவிக்கப்படும். இஸ்லாமியர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசினார்.அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, நேற்று மாலை 5 மணிக்கு தன் இரண்டாம் நாள் பிரசாரப் பயணத்தை துவக்கினார். திருச்சி கருமண்டபம், புங்கனூர், ராம்ஜி நகர் மில் ஆகிய இடங்களில் அவர் பேசியதாவது: 


வெறும் ஆட்சி மாற்றத்துக்காக நடக்கும் சாதாரண தேர்தல் இல்லை. தமிழக மக்களின் விடுதலைக்கான தேர்தல். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்கள், பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஐந்தாண்டாக ரவுடிக் கும்பல், தமிழகத்தை ஆட்சி செய்து வந்தது. ஐந்தாண்டு தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினாரா? இல்லை. ஐந்தாண்டில் ஒன்பது முறை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. ஐந்து ஆண்டுக்கு முன் வெறும் 15 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ அரிசி 42, 13க்கு விற்ற சர்க்கரை 35, 28க்கு விற்ற துவரம் பருப்பு 90, 35க்கு விற்ற புளி 110, 38க்கு விற்ற பூண்டு விலை 250 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது.

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டால், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் முடங்கிவிட்டன. வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிட்டது. அரசு துறைகளில் ஊழல் பெருகிவிட்டது. தமிழகம், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது. ஆனால், "ஸ்பெக்ட்ரம்' மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயை கருணாநிதி குடும்பம் கொள்ளையடித்துள்ளது. கருணாநிதி குடும்பம், "ரியல் எஸ்டேட்' தொழிலைத் தான் செய்கிறது. என் ஆட்சியில் தான் சிறுபான்மையினர் நலத்துறை முதல் முறையாக திருத்தியமைக்கப்பட்டது.

2006ல் பொறுப்பேற்ற கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்கள் இடம்பெறாத வகையில் திருத்தியமைக்கப்பட்டது. ஆனால், கருணாநிதி தன்னிச்சையாக இஸ்லாமியர்களுக்கு, 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்தார்; இதையும் முறையாக அமல்படுத்தவில்லை. அ.தி.மு.க., ஆட்சி அமைத்தால், இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு உயர்த்தி அறிவிக்கப்படும். இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என கண்காணிக்கப்படும்; இஸ்லாமியர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டது. தி.மு.க.,வினர் தரும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்; அது உங்கள் பணம். மனசாட்சி என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள். இவ்வாறு ஜெ., பேசினார்.

கருத்துகள் இல்லை: