சனி, மார்ச் 26, 2011

வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் கூட்டணி பலம் : கடலூர் மாவட்ட நிலவரம்


கடலூர் மாவட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பில் நெல்லிக்குப்பம் நீக்கப்பட்டு, நெய்வேலி உருவாக்கப்பட்டுள்ளது. மங்களூர் (தனி), திட்டக்குடி (தனி) தொகுதியானது. தற்போது மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி), புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) என, ஒன்பது சட்டசபை தொகுதிகள் உள்ளன.

கடலூர்: தி.மு.க.,வைச் சேர்ந்த அய்யப்பன் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியில் பள்ளி வளர்ச்சிக்கும், கிராம சாலை மேம்பாட்டிற்கும் முன்னுரிமை அளித்தார். பாதாள சாக்கடைத் திட்டப் பணி முடியாமல், புழுதி நகரமானதாலும்,
ரயில்வே சுரங்கப்பாதை அமைக்காததும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தும் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை என்ற அதிருப்தி உள்ளது.

அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க., கூட்டணி பலம், தி.மு.க., வேட்பாளருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

பண்ருட்டி: பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன், பண்ருட்டியில் அரசு கல்லூரி, முந்திரி ஏற்றுமதி மண்டலம் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தவர், இன்ஜினியரிங் கல்லூரியை கொண்டு வந்தார். பண்ருட்டி நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கடலூர் - சித்தூர் சாலை புறவழிச் சாலை, சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம், பெண்ணையாறு கஸ்டம்ஸ் சாலை திட்டங்களை கொண்டு வர முயற்சிக்கவில்லை. தற்போது நெய்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார். தி.மு.க., சார்பில், நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் போட்டியிடுகிறார். கூட்டணி பலமாக இருந்தாலும், உட்கட்சி பூசல் மற்றும் தொகுதியில், அ.தி.மு.க., அணியில் உள்ள, தே.மு.தி.க.,வின் செல்வாக்கால் கடும் போட்டியை ஏற்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடி: 1996ம் ஆண்டு முதல் மூன்று முறை தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற பன்னீர் செல்வம், இரு முறை அமைச்சர் பதவி வகித்ததால் இத்தொகுதி நன்கு வளர்ச்சி பெற்றுள்ளதோடு, தாலுகா அந்தஸ்தையும் பெற்றுள்ளது. விசைத்தறி கூடம் அமைக்காததும், வடலூர் தொழிற்பேட்டையை மேம்படுத்தாததும் பெரும் குறை. மீண்டும் பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., சார்பில், சொரத்தூர் ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க., கூட்டணி, அமைச்சருக்கு கடும் சோதனை தான்.

நெய்வேலி: பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகளை பிரித்து, புதிதாக இத்தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள பண்ருட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த, 42 ஊராட்சிகளில் முந்திரி விவசாயமே பிரதான தொழில். பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன், தற்போது இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, தே.தி.மு.க., சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். சம பலத்தில் உள்ள இவர்களின் வெற்றியை தீர்மானிப்பது, என்.எல்.சி., தொழிலாளர்கள் கையில் உள்ளது.

சிதம்பரம்: அ.தி.மு.க., அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். தொகுதியில் தொழில் வளர்ச்சி இல்லை. இதுவரை இந்தத் தொகுதியில் வென்றவர்கள், கடைமடை பகுதியாக உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தி.மு.க., கூட்டணியில், மூ.மு.க., ஸ்ரீதர் வாண்டையார் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் வேட்பாளர் பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

காட்டுமன்னார்கோவில் (தனி): வி.சி., கட்சி எம்.எல்.ஏ., ரவிக்குமார், நாகை - கடலூர் மாவட்டத்தை இணைக்கும் முட்டம் பாலம், சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் சாலைகளை புதுப்பித்தது, நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கைக்காக, 115 கோடி ரூபாய் நிதி பெற்றுத் தந்ததை சாதனைகளாக கூறுகிறார்.

"தொழிற்பேட்டை துவங்குவேன், நந்தனார் கல்வி நிறுவனங்களில் மகளிர் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி துவங்கப்படும்' என்றார். அதற்கான முயற்சியே எடுக்கவில்லை. வெள்ளம் சூழ்ந்த நேரத்தில் கூட மக்களை சந்திக்கவில்லை. மீண்டும் ரவிக்குமாரே போட்டியிடுகிறார். அ.தி.மு.க.,வில் முருகுமாறன் களமிறங்கியுள்ளார்.

புவனகிரி: அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம் உள்ளார். இன்று வரை சிற்றூராட்சி அந்தஸ்தில் தான் இருந்து வருகிறது. எந்த முன்னேற்றமும் இல்லை. "எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருப்பதால் என்னால் எதையும் செய்ய முடியவில்லை' என, கூறிவிட்டார். அ.தி.மு.க., கோட்டையான இங்கு, மீண்டும் அவரே போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து பா.ம.க.,வின் அறிவுச்செல்வன் இறக்கப்பட்டுள்ளார். மறுசீரமைப்பால், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக அமையும் என்பது தான் தொகுதியின் பரவலான பேச்சு.
விருத்தாசலம்: விஜயகாந்த் வெற்றி பெற்றதால், வி.ஐ.பி., அந்தஸ்தைப் பெற்றது. தொகுதி நிதியைத் தவிர, அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற முயற்சிக்கவில்லை. வாக்காளர்களிடம் உறுதியளித்த மகளிர் கல்லூரி உள்ளிட்ட தொகுதி வளர்ச்சி விஷயங்களை கண்டுகொள்ளவேயில்லை. இந்த தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்ற காங்கிரசின் நீதிராஜன் இம்முறை களமிறங்கியுள்ளார். தே.மு.தி.க., சார்பில், முத்துகுமார் போட்டியிடுகிறார். இரு கூட்டணிகளும் வலுவாக உள்ளதால் கடும் போட்டி நிச்சயம்.

திட்டக்குடி (தனி): கல்வி, பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கியுள்ளது. வி.சி., கட்சியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானவர் செல்வப் பெருந்தகை. சொன்னதைச் செய்வதற்குள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மாறி, தற்போது காங்கிரசில் இருக்கிறார்

இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக தொழிற்சாலைகளைக் கொண்டு வராதது பெரும் குறை. வி.சி., சார்பில், சிந்தனைச்செல்வன் போட்டியிடுகிறார். தே.மு.தி.க., சார்பில் தமிழழகன் போட்டியிடுகிறார். கூட்டணி பலமே வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது.

முக்கியத் தொழில் : விவசாயம், கைத்தறி நெசவு, மீன்பிடி தொழில்.

நீண்டகால கோரிக்கைகள் : வெள்ள சேதத்தை தவிர்க்க வடிகால், தொழிற்சாலைகள்.

கருத்துகள் இல்லை: