சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய நேரடி சாட்சியான துளசிராம் பிரஜாபதியின் கொலைவழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இவ்வழக்கை சீர்குலைக்க குஜராத் போலீஸ் முயற்சி மேற்கொள்வதாக அளிக்கப்பட்ட புகார் மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் ஆறுமாதத்திற்குள்ளாக விசாரணையின் முன்னேற்றத்தைக் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் நீதிபதிகளான பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் வழங்கிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொஹ்ரபுதீன் ஷேக் கொலை வழக்கில் சாட்சியான பிரஜாபதியை ஆதாரங்களை அழிப்பதற்காக போலீசார் கொலைச் செய்ததாக சுட்டிக்காட்டி அவருடைய மனைவி நர்மதாபாய் சி.பி.ஐ விசாரணையை கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினார்.
பிரஜாபதி வழக்கை விசாரித்து குஜராத் போலீஸ் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளதால் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை என்ற குஜராத் அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. சி.பி.ஐ விசாரிப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த வழக்குதான் இது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
குஜராத், ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த போலீசாருக்கு இவ்வழக்கில் தொடர்பிருப்பதுக் குறித்து உச்சநீதிமன்றம் கடுமையான கவலையை வெளிப்படுத்தியது.
குஜராத்திற்கு வெளியே வசித்த சொஹ்ரபுதீன், பிரஜாபதி கொலை வழக்குகளின் சாட்சிகளை அச்சுறுத்தியும், கடத்திச் செல்லவும் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சரும், வழக்கில் முக்கிய குற்றவாளியுமான அமீத் ஷா குஜராத் போலீஸின் உதவியுடன் முயன்றதாக சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நிறுத்திவைக்க குஜராத் போலீஸிடம் கடந்த டிசம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சரையும், உயர் போலீஸ் அதிகாரிகளையும் பாதுகாப்பதற்காக சி.பி.ஐ விசாரணையை தடுக்கும் நோக்கத்துடன் அவசர அவசரமாக குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்துள்ளது.
பிரஜாபதி கொல்லப்படுவதற்கு முன்பும், அதற்கு பிறகும் 331 தடவை அமித்ஷா, கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளான டி.ஐ.ஜி வன்சாரா, எஸ்.பி.ராஜ்குமார் பாண்டியன் உள்ளிட்டவர்களுடன் பேசியதாக சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக