சனி, ஏப்ரல் 09, 2011

எஸ்.டி.பி.​ஐயின் ஆதரவில்லாம​ல் எதிர்காலத்​தில் எவரும் ஆட்சியமைக்​க இயலாது – ராம் விலாஸ் பஸ்வான்


சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தலைமையிலான கூட்டணியின் ஆதரவில்லாமல் எவரும் கேரளாவில் ஆட்சியமைக்க இயலாது என முன்னாள் மத்திய ரெயில்வே துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் அகில இந்திய தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வேங்கரா சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர் அப்துல் மஜீத் ஃபைஸியை ஆதரித்து நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது:

“எல்.ஜே.பி(லோக் ஜனசக்தி)யும், எஸ்.டி.பி.ஐயும் கேரளாவில் சாதாரண மக்களின் பிரச்சனைகளை கையிலெடுத்து செயல்பட உறுதிப்பூண்டுள்ளனர். கேரளாவில் 110 தொகுதிகளில் இக்கூட்டணி மக்களின் தீர்ப்பை எதிர்பார்த்து களமிறங்கியுள்ளது. மக்கள் ஆட்சியை உருவாக்குவதற்காகத்தான் நாங்கள் பணியாற்றுகிறோம். ஊழல் விவகாரத்தில் கேரளாவை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. ஊழலும், ரவுடியிஸமும் இங்கு முக்கிய பிரச்சனைகளாகும்.
அரசியல் விழிப்புணர்வு பெற்ற கேரளாவில் மக்களை இனிமேலும் முட்டாள்களாக்க காங்கிரஸ் கட்சியாலோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினாலோ இயலாது. தலைவர்களும், கொள்கைகளும் இருந்தபோதும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் ஊழலின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக மாறியதுதான் இந்த தோல்வி.
தலித்,ஒடுக்கப்பட்ட,சிறுபான்மை சமூகத்தினரை அரசியலில் தீண்டத்தகாதவர்களாக கருதி ஒதுக்கிவைத்துள்ளன அரசியல் கட்சிகள். நீதித்துறையில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும். ஊழலும், விலைவாசி உயர்வும்தான் நாட்டில் ஜொலித்துக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனைகள். சிறுபான்மை மக்களின் மோசமான சூழலை எடுத்துக்காட்டும் மிஷ்ரா கமிஷனின் அறிக்கையின் மீது நடவடிக்கை மேற்கொள்ள காங்கிரஸ் அரசினால் இயலவில்லை. இவ்விஷயத்தில் காங்கிரஸ் மெளனம் சாதிக்கிறது.
கல்வியறிவு அதிகமான கேரள மாநிலத்தில் கூட தீண்டாமை நிலவுவதன் உதாரணம்தான் சமீபத்தில் பத்திரிகையில் வெளிவந்த செய்தி. திருவனந்தபுரத்தில் ஐ.ஜி ரேங்கில் பணியாற்றிய தலித் சமூகத்தைச் சார்ந்தவர் பதவியிலிருந்து மாறியபொழுது அவருடைய அலுவலகத்தையும், வாகனத்தையும் பசுவின் சாண தண்ணீரால் தெளித்து சுத்தப்படுத்தியதே அச்செய்தியாகும். தீண்டாமை கேரள மாநிலத்திலும் நிலவுகிறது என்பதற்கு இதுவே உதாரணமாகும்.
நான் இடம்பெற்ற வி.பி.சிங் அரசு மண்டல் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் 27 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டை அமுல்படுத்திய வேளையில் அதற்கு எதிராக ரதயாத்திரை நடத்தி சமுதாயங்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய கட்சிதான் பா.ஜ.க.
1992-ஆம் ஆண்டு டிசம்பர்-6-ஆம் தேதி அம்பேத்கரின் நினைவு தினத்தில்தான் ஹிந்துத்துவா வாதிகள் பாப்ரி மஸ்ஜிதை இடித்தனர். இது இந்திய அரசியல் சட்டம் மற்றும் அம்பேத்காரின் மீதான வெறுப்பைதான் சுட்டிக்காட்டுகிறது.
இந்தியா மேல்ஜாதி வர்க்கத்தினருக்கு சொந்தமானதல்ல. அனைத்து இந்திய குடிமக்களுக்கும் சொந்தமானது.’” இவ்வாறு பஸ்வான் உரை நிகழ்த்தினார்.
சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் அகில இந்திய தலைவர் இ.அபூபக்கர் பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்தார்.

கருத்துகள் இல்லை: