குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் கிராம வளர்ச்சித் திட்டத்தை பாராட்டிய அன்னா ஹஸாரேவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஊழல் புரியும் ஆட்சியாளர்களை விசாரிக்க ‘லோக்பால்’ மசோதாவை நிறைவேற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியவர் ஹஸாரே. இவரது போராட்டம் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ந்த மத்திய அரசு ‘லோக்பால்’ மசோதாவை தயார்செய்யும் குழுவில் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடம் அளித்தது. இதன்மூலம் நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களாலும் புகழாரம் சூட்டப்பட்டார் ஹஸாரே.
இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் குஜராத் மாநில முதல்வர் மோடி மற்றும் பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோரின் கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு புகழாரம் சூட்டினார் அவர். அன்னா ஹஸாரேவின் இப்பேட்டி காந்தியவாதிகளையும், மனித உரிமை ஆர்வலர்களையும், நாடு முழுவதிலுமுள்ள நடுநிலையாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. இதனைத் தொடர்ந்து ஹஸாரே தனது கருத்தை வாபஸ் பெறாவிட்டால் அவரது ஊழலுக்கெதிரான இயக்கத்திலிருந்து வெளியேறப் போவதாக காந்தியவாதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோடியின் கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு புகழாராம் சூட்டிய ஹஸாரேவின் அறிக்கை குஜராத்தின் உண்மையான நிலைமைகளை குறித்த அறியாமையின் வெளிப்பாடாகும் என மோடியை விமர்சிப்பவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஹஸாரே மோடிக்கு புகழாரம் சூட்டியதை கண்டித்து பிரபல மனித உரிமை ஆர்வலர்களும், காந்தியவாதிகளும் வெளியிட்ட கருத்துக்கள்:
பிரபல காந்தியவாதி சினுபாய் வைத்யா: ஹஸாரே புகழாரம் சூட்டியபடி குஜராத்தில் கிராமங்களில் வளர்ச்சி நிலை ஏற்பட்டிருந்தால் கிராமங்களில் வாழும் 10 சதவீத மக்கள் ஏன் சொந்த கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறுகின்றனர்? காரணம் வேறொன்றுமில்லை – அக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமையும், வளர்ச்சியில் பின் தங்கிய நிலையுமாகும். இதனால் கிராமமக்கள் நகரங்களில் குடியேறுகின்றனர். நிலைமை இவ்வாறிருக்க மோடியை வாழ்த்த என்ன நியாயம் உள்ளது?
பிரபல நாட்டிய கலைஞரும், சமூக சேவகருமான மல்லிகா சாராபாய்: குஜராத்தில் கிராம வளர்ச்சி என்பது பெயரளவில் மட்டுமே. விவசாய நிலங்களையும், பொதுவான மேய்ச்சல் நிலங்களையும் கையகப்படுத்தி அடிமாட்டு விலையில் குத்தகைதாரர்களுக்கு விற்கும் மோடியின் நடவடிக்கை எவ்வாறு கிராமங்களை வளர்ச்சியடையச் செய்யும்? சுஜாலாம் சுஃபாலாம் (Sujalam Sufalam scam) நீர் சேகரிப்பு திட்டத்தில் 1700 கோடி ஊழல், 109 கோடி ரூபாய் அணைக்கட்டு ஊழல் (NREGS boribund scam), மீன்வளத் துறையில் (fisheries) 600 கோடி ஊழல் உள்பட மாநிலத்தின் அனைத்து துறைகளிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. அரசு பெரும் கடனில் மூழ்கியுள்ளது. 21 லட்சம் விவசாயிகள் இழப்பீடுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அன்னா ஹஸாரே மோடியை புகழ்ந்து கூறிய வார்த்தைகளை வாபஸ் பெறாவிட்டால் அவருடைய ஊழலுக்கெதிரான இயக்கத்திலிருந்து விலகுவோம்.
இதுத்தொடர்பாக அன்னா ஹஸாரேவுக்கு மல்லிகா சாராபாய் கடிதம் எழுதியுள்ளார்.
க்ராந்தி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பராஸிம்ஹ் ஞாலா: கடந்த 7 வருடங்களாக மாநில ஆட்சியாளர்களின் ஊழலை விசாரிக்கும் ‘லோகயுக்தா’ குஜராத்தில் இல்லை. ஊழல் தொடர்பாக வந்துள்ள நூற்றுக்கணக்கான புகார்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள குஜராத்தை ஹஸாரே ஏன் புகழ்கிறார்?
பிரபல சமூக சேவகர் நதீம் ஸயீத்:சிறுபான்மையின மக்களின் கூட்டுப்படுகொலை நடந்த, போலி என்கவுண்டர் கொலைகள் நடந்தேறிய, பாலியல் வன்புணர்வுகளும், கொலைகளும் அரங்கேறிய மாநிலமான குஜராத்தின் முதல்வர் மோடியா பிற மாநில முதல்வர்களுக்கு முன்மாதிரியாக மாறவேண்டும்? என நதீம் அன்னா ஹஸாரேவிடம் கேள்வி எழுப்புகிறார்.
குஜராத் மக்கள் உரிமை ஜனநாயக அமைப்பின் தலைவர் ஜெ.எஸ்.பந்தூக் வாலா:ஹஸாரே போன்றோர் நடத்தும் மக்கள் இயக்கங்களை கபளீகரம் செய்வது என்பது எக்காலத்திலும் பா.ஜ.கவின் தந்திரமாகும். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ‘முழு புரட்சி’(total revolution)யையும், வி.பி.சிங்கின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தையும் தட்டிப் பறித்த சங்க்பரிவார் ஹஸாரேவின் இயக்கத்தையும் பறித்துச் சென்றுவிடாமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
இந்நிலையில் மோடியை தான் புகழ்ந்தது கடும் எதிர்ப்பை கிளப்பியதையொட்டி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஹஸாரே, தான் எல்லாவித மதரீதியான ஜாதி ரீதியிலான பாரபட்சத்திற்கு எதிரானவன் எனவும், எல்லாவித மதரீதியான கலவரங்களையும் தான் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மோடி மற்றும் நிதீஷின் கிராமீய வளர்ச்சியை மட்டுமே பாராட்டியதாகவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஹஸாரேவின் அறிக்கையைக் குறித்து கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ரஷீத் அல்வி:
ஹஸாரேவின் அறிக்கையைக் குறித்து கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ரஷீத் அல்வி:
இந்தியாவில் எந்த மதசார்பற்ற தலைவரும் மோடியை ஆதரிக்கமாட்டார்கள். நீங்கள் மோடியை ஆதரிக்கின்றீர்கள் என்றால் 2002-ஆம் ஆண்டு நடந்த இனப் படுகொலையை ஆதரிக்கினறீர்கள் என அர்த்தமாகும் என அவர் காட்டமாக பதிலளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக