திங்கள், ஏப்ரல் 11, 2011

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் வரை பதிலடி தொடரும்: ஹமாஸ்


காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துவரை அந்நாட்டின் மீது ஏவுகணைகளை வீசுவதை தொடர ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் மஹ்மூத் அல் ஸஹர் போராளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல் அரசை ஃபலஸ்தீன் ஒரு விதத்திலும் அங்கீகரிக்காது. ஆக்கிரமித்த ஃபலஸ்தீன் மண்ணிலிருந்து அவர்கள் வெளியேறும் வரை தற்காப்பு போர் தொடரும் என ஸஹர் தெரிவித்தார்.

கடந்த மூன்று மாதங்களிடையே 45 ஃபலஸ்தீன் மக்களை இஸ்ரேல் கொலைச் செய்துள்ளது. கடந்த நான்கு தினங்களாக இஸ்ரேல் நடத்தும் விமானத்தாக்குதலில் 19 பேர் மரணித்துள்ளனர். பன்னிரெண்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
2008 டிசம்பர் முதல் 2009 ஜனவரி வரை இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்ட காஸ்ஸா போருக்கு பிறகு மிகவும் வலுவான தாக்குதலை இஸ்ரேல் நடத்திவருவதாக ஸஹர் தெரிவித்தார்.
இஸ்ரேல் விமானத்தாக்குதலுக்கு எதிராக ஹமாஸ் ஏவுகணைகளை ஏவுவதில் ஆள்சேதம் குறித்து தகவல் இல்லை.
2007 ஆம் ஆண்டு ஜனநாயகரீதியிலான தேர்தல் மூலம் தேர்வுச் செய்யப்பட்ட ஹமாஸ் காஸ்ஸாவை ஆட்சிபுரிந்த காலம் முதல் இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது கடுமையான பொருளாதார தடைகளை ஏற்படுத்திவருகிறது. இதனால் 15 லட்சம் ஃபலஸ்தீன் மக்களின் வாழ்க்கை துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
இஸ்ரேல் ராணுவ வீரன் கிலாத் ஷாலிதை கடத்திச் செல்வதற்கு தலைமை வகித்த ஹமாஸ் கமாண்டர் தைஸர் அபூவை விமானத்தாக்குதலில் கொலைச் செய்ததாக இஸ்ரேல் கூறியதற்கு, ஹமாஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு ஹமாஸ் கிலாத் ஷாலிதை கடத்திச் சென்றது. அவரை விடுவிப்பதற்கான இஸ்ரேலின் முயற்சி இதுவரை பலிக்கவில்லை. அதேவேளையில் ஹமாஸ் ராக்கெட் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவந்தால் தாங்கள் போர் நிறுத்தத்திற்கு தயார் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக் இதனை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: