2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேர் போலி என்கவுண்டரில் குஜராத் மோடி அரசின் போலீசாரால் அநியாயமாக கொலைச் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் எட்டாம் தேதிக்குள் பூர்த்திச்செய்ய வேண்டும் என குஜராத் உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி)விற்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கில் சில முக்கிய சாட்சிகள் வாக்குமூலத்தை மாற்றியதுக் குறித்தும் விசாரணை நடத்த எஸ்.ஐ.டி தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.ஐ.டியின் விசாரணைக் குறித்து ஆராயும் வேளையில் நீதிபதிகளான ஜெயானந்த் பட்டேல், அபிலாஷ குமாரி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி இவ்வழக்கில் விசாரணையை துவக்கவும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சாட்சிகளின் வாக்குமூலம் மாற்றம் குறித்து விசாரணை செய்யவேண்டுமென கடந்தவாரம் பதவியேற்ற எஸ்.ஐ.டியின் தலைவர் ஆர்.ஆர்.வர்மாவிடம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாட்சிகள் வாக்குமூலத்தை மாற்றியதில் யாருக்கேனும் பங்குண்டா? என்பதை கண்டறியவும் தெளிவான ஆதாரங்களை ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்தது. வாக்குமூலத்தை மாற்றியது குறித்து எவர் மீதேனும் ஆதாரமிருந்தால் அவரை கைதுச்செய்து கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தவும் எஸ்.ஐ.டி தலைவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எஸ்.ஐ.டி உறுப்பினர் மோகன் ஜாவின் மீது இன்னொரு உறுப்பினரான சதீஷ் வர்மா கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து எஸ்.ஐ.டியின் தலைவருக்கு சிறப்பு அதிகாரத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
எஸ்.ஐ.டியின் விசாரணை ஆமை வேகத்தில் நகர்வதாகவும், வழக்கை வெளியேயிருந்து சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாகவும் வழக்கறிஞர் யோகேஷ் லகானி தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையை சீர்குலைக்க உள்ளேயிருந்தும், வெளியேயிருந்தும் நிர்பந்தம் அளிக்கப்படுவதாக இஷ்ரத் ஜஹானுடன் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட கேரளாவைச் சார்ந்த ஜாவே ஷேக் என்ற பிராணேஷ் பிள்ளையின் தந்தை கோபினாத் பிள்ளையின் வழக்கறிஞர் முகல் சின்ஹா தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக