மலேகான் வழக்கு உள்ளிட்ட விவகாரங்களில் மஹராஷ்ட்ரா காவல்துறை முஸ்லிம்களிடம் பாரபட்சமாக நடந்துவருவதை உணர்த்துவதற்காக மஹராஷ்ட்ரா பிரதிநிதிகுழு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை சந்தித்தது.
முதல்வர் பிரதிவிராஜ் சவானுடன் மாநில அமைச்சர் ஆரிஃப் நஸீம் கான், எம்.எல்.ஏக்களான அமீன் பட்டேல், பாபா சித்தீகி, அபூ ஸத்தார், முஸ்லிம் தலைவர்களான டாக்டர்.அஸீமுத்தீன், ஸாலிம் அல்வாரே, ஃபரீத் ஷேக், அப்துல் ஹமீத் அஸ்ஹரி, திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட் ஆகியோர் அடங்கிய குழு இரு மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேசியது.
மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி புரிந்தபோதும் போலீஸின் அணுகுமுறை பாரபட்சமானது என முதல்வரின் முன்னிலையில் தாங்கள் தெரிவித்ததாக ஸாலிம் அல்வாரே கூறினார்.
மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக பொய்வழக்கில் கைதுச்செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் வாடும் அப்பாவி நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யக்கோரித்தான் முக்கியமாக இக்குழு இரு அமைச்சர்களையும் சந்தித்துள்ளது.
மலேகான் வழக்குகளை கையாளும் முறையைக்குறித்து தங்களது கவலையை அரசுக்கு தெரிவித்துள்ளதாக அல்வாரே மேலும் கூறினார்.குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிந்துத்துவா சக்திகள் என்பது தெளிவானபிறகும் நிரபராதிகளுக்கு ஜாமீன் மறுக்கும் போலீஸ் அணுகுமுறையில் பிரதிநிதிக்குழு தங்களது எதிர்ப்பை தெரிவித்தது.மதத்தின் பெயரால் எவரும் பாரபட்சத்தை சந்திக்கவில்லை என்பதை உறுதிச்செய்ய இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட மத்திய அரசிடம் பிரதிநிதிகுழு வலியுறுத்தியுள்ளது.
முன்னர் மஹராஷ்ட்ரா மாநில முதல்வரை சென்று சந்தித்த பிரதிநிதிக்குழுவிடம் டெல்லிக்கு மத்திய அமைச்சர்களை சந்திக்க உடன்வருவதாக முதல்வர் வாக்குறுதியளித்திருந்தார்.அதன் அடிப்படையில் முதல்வரின் இஃப்தார் விருந்தை புறக்கணிப்பதற்கான முடிவை தலைவர்கள் வாபஸ் பெற்றனர்.முதல்வரை சென்று சந்தித்த குழுவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் மனைவியர்களும் அடங்கியிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக