சனி, ஆகஸ்ட் 20, 2011

ஹஸாரேவின் போராட்டத்தில் பங்கில்லை:அமெரிக்க செனட்டர்

அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப்போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கய்ன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஹஸாரேவின் போராட்டத்தில் அமெரிக்கா தலையிடவோ, தலையிடுவதற்கான எண்ணமோ இல்லை என அவர் கூறினார்.
ஹஸாரேவின் போராட்டம் போன்ற உள்நாட்டு பிரச்சனைகளை எதிர்கொள்வதிலும் தீர்ப்பதிலும் இந்தியாவின் வலுவான ஜனநாயக முறைக்கு இயலும். தற்போதையது ஜனநாயகத்தில் இயல்பானது என மெக்கய்ன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு எதிராக நேற்று முன்தினம் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரின் விமர்சனங்களுக்கு பதிலளித்தார் மெக்கய்ன். ஹஸாரேவின் போராட்டத்தை சமயோஜிதத்துடன் கையாளவேண்டும் எனவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஹஸாரேவை அனுமதிக்கவேண்டும் எனவும் முன்னர் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனை கண்டித்து நேற்று முன்தினம் ஹஸாரேவின் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவின் பங்கிருக்கலாம் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஷித் ஆல்வி சந்தேகத்தை வெளிப்படித்தியிருந்தார்.
இதற்கிடையே ஹஸாரேவின் போராட்டத்தை நியாயப்படுத்தி அமெரிக்கா கருத்து தெரிவித்ததாக இந்தியாவின் ஊடகங்கள் தவறான செய்தியை அளித்ததற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அறிக்கை இந்தியா தொடர்பானது அல்ல எனவும், உலகத்தில் நடைபெறும் அமைதியான போராட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது என பொதுவாக தெரிவித்ததாகவும் அமெரிக்காவின் வெளியுறுவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகோரியா நியூலண்ட் தெரிவித்துள்ளார். அமைதியான போராட்டம் நடத்துவதற்கு அனுமதிப்பது ஜனநாயக அரசுகளின் கடமை என தனது அறிக்கையின் மூலம் எண்ணுவதாகவும் நியூலண்ட் விளக்கமளித்துள்ளார்.
இதற்கிடையில் ஹஸாரேவை புதிய காந்தியின் உதயமாக பிரிட்டன் ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.’இந்தியாவை நடுங்கச்செய்த புதிய காந்தி’ என்ற தலைப்பில் டெலிக்ராப் பத்திரிகை ஹஸாரேவின் போராட்ட செய்தியை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: