2008 ஜூலை 25-ஆம் தேதி பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி சிறையில் அடைக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில் அவரது வழக்கு விசாரணை நீண்டு செல்வது
உறுதியானதைத் தொடர்ந்து கோவை வழக்கு சமமான வருடங்கள் சிறையில் கழிக்கவேண்டிய சூழல் ஏற்படுமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அன்வாருச்சேரியில் கைதுச் செய்யப்பட்ட அப்துல் நாஸர் மஃதனி பெங்களூர் பரப்பன அக்கிரகார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள ஜாமீன் மனு மட்டுமே இனி அப்துல் நாஸர் மஃதனிக்கான நம்பிக்கையாகும்.
சிறையில் அப்துல்நாஸர் மஃதனி கடுமையான மனித உரிமை மீறலுக்கு ஆளாகிவருகிறார். போதுமான சிகிட்சை கிடைக்காததை தொடந்து அவருடைய உடல் நிலை மோசமடைந்துள்ளது. மஃதனி அடைக்கப்பட்டிருக்கும் சிறை அறையில் பாதுகாப்பின் பெயரால் 24 மணிநேரமும் விளக்கும் எரிகின்றன. கேமராவும் இயங்குகின்றது.
ஸெர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்,முதுகுவலி, நீரழிவு நோய், இதயம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட நோய்களால் ஏற்கனவே அவதிப்படும் அப்துல் நாஸர் மஃதனிக்கு உடல்நிலை சிறை வாழ்க்கையைத் தொடர்ந்து மேலும் சீர்கெட்டுள்ளது. நீரழிவு நோய் அதிகமானதை தொடர்ந்து ஒரு கண்ணின் பார்வை அடிக்கடி இழக்கிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி ஆயுர்வேத மருத்துவமனையில் கிடைத்த 28 தினங்களுக்கான பஞ்சகர்ம சிகிட்சை மட்டுமே அவருக்கு ஆசுவாசமாக மாறியது.
குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை குறைந்தது மூன்று வருடமாவது நீள வாய்ப்புள்ளதாக அப்துல் நாஸர் மஃதனிக்காக ஜாமீன் மனுக்களில் ஆஜரான வழக்கறிஞர் பி.உஸ்மான் கூறுகிறார். சிறப்பு நீதிமன்றம் நிறுவப்பட்ட போதிலும் விசாரணை நடவடிக்கைகள் மட்டுமே தற்பொழுது துவங்கியுள்ளன.
குற்றங்களை வாசித்து கேட்டல், சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை, ஆதாரங்களை பரிசோதித்தல் ஆகியன பூர்த்தியாகி தீர்ப்புக்கூற இன்னும் பல வருடங்கள் ஆகும்.
சிறையிலேயே சிறப்பு நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளதால் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு வழக்கறிஞர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நஸீர் மற்றும் ஷஃபாஸ் ஆகியோர் கேரளாவில் பல்வேறு வழக்குகளில் விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்று பேர் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக விசாரணையில் தாமதம் ஏற்படலாம்.
அதேவேளையில், குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை விரைவில் முடிக்க சிறப்பு நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக