பொது விடுமுறை தினமான நேற்று ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் பிரிட்டீஷ் கலாச்சார மையத்தின் மீது தாலிபான்கள் வலுவான தாக்குதலை நடத்தினர். இச்சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
1919-ஆம் ஆண்டு பிரிட்டனிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு விடுதலை கிடைத்ததை நினைவுக்கூறும் விதத்தில் ஆப்கானுக்கு ஆகஸ்ட்-19-ஆம் தேதி சுதந்திர தினமாகும். இத்தினத்தை கொண்டாடும்
வேளையில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இத்தாக்குதலில் ஆப்கான் போலீஸ் அதிகாரிகளும், முனிசிபாலிட்டி பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
மரணமடைந்தவர்களில் வெளிநாட்டைச்சார்ந்தவரும் அடங்குவார் என ப்ரஸ் டி.வி தெரிவிக்கிறது.காலை ஆறுமணிக்கு பத்து நிமிடங்கள் இடைவெளியில் பலத்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக போலீஸ் கூறுகிறது.குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் ஆறுபேரைக்கொண்ட ஆயுதம் ஏந்திய குழு தாக்குதலை நடத்தினர்.தாக்குதலின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக தாலிபான் செய்தி தொடர்பாளர் ஸபியுல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிலிருந்து அமெரிக்க ராணுவம் உடனடியாக வாபஸ் வாங்குவதாக அறிவித்தபிறகு நாட்டில் ஆக்கிரமிப்பு ராணுவம் மற்றும் வெளிநாடுகளின் அலுவலகங்கள் மீதான தாலிபானின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.அதிபர் ஹமீத் கர்ஸாயியின் ஒன்றுவிட்ட சகோதரரும், காந்தஹார் மேயரும், உயர் போலீஸ் அதிகாரிகளும் ஒரு மாதத்திற்கிடையே தாலிபான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் தாலிபான் நடத்திய இன்னொரு தாக்குதலில் ஆக்கிரமிப்பு ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.இத்துடன் பத்துவருட அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு போரில் ஆப்கானில் கொல்லப்படும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு ராணுவத்தினரின் எண்ணிக்கை 2683-ஆக உயர்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக