லெபனான் நாட்டின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரியின் கொலைத்தொடர்பாக விசாரணைக்குழு தயார் செய்த குற்றப்பத்திரிகையின் ரகசிய நிலையை நீக்க ஐ.நா தீர்ப்பாயம் தீர்மானித்துள்ளது. குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட நான்கு ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்களை
விசாரணை செய்வதற்கு ஆதாரங்கள் இருப்பதாக தீர்ப்பாயம் உத்தரவை பிறப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி அல்ஜஸீரா கூறுகிறது. குற்றப்பத்திரிகையை பகிரங்கப்படுத்துவதும், கைது வாரண்டும் உடனடியாக வெளியாகும்.
2005-ஆம் ஆண்டு பெப்ருவரி 14-ஆம் தேதி ரஃபீக் ஹரீரியும் 22 நபர்களும் கொலைச்செய்யப்படுவதற்கு காரணமான கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் நான்கு ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் மீது கடந்த ஜூன் மாதம் தீர்ப்பாயம் கைது வாரண்டை பிறப்பித்திருந்தது.
லெபனான் அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ரஃபீ ஹரீரியின் கொலையை விசாரிக்க ஐ.நா 2007-ஆம் ஆண்டு சிறப்பு தீர்ப்பாயத்தை நியமித்தது. ஹிஸ்புல்லாஹ்வை அழித்தொழிக்கும் முயற்சியின் ஒருபகுதிதான் தீர்ப்பாயத்தின் விசாரணை என குற்றச்சாட்டும் வலுவாக எழுந்துள்ளது.
தங்களின் நான்கு உறுப்பினர்கள் மீது கைது வாரண்டை பிறப்பித்ததை கண்டித்து ரஃபீக் ஹரீரியின் மகன் ஸஅத் அல் ஹரீரியின் தலைமையிலான அரசின் அமைச்சரவையிலிருந்து ஹிஸ்புல்லாஹ் அமைச்சர்கள் ராஜினாமா செய்திருந்தனர். பின்னர் உருவான அமைச்சரவையும் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவுடன் செயல்படுகிறது.
ரஃபீக் ஹரீரியின் கொலையில் தங்களுக்கு பங்கில்லை என்பதை தெளிவுப்படுத்திய ஹிஸ்புல்லாஹ் விசாரணை அரசியல் தூண்டுதல் எனவும், சந்தேகத்தின் அனைத்து வாயில்களையும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியது. ஹிஸ்புல்லாஹ்வை அழிப்பதற்கான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சதித்திட்டத்தை தான் தீர்ப்பாயம் நடைமுறைப்படுத்துவதாக அவ்வமைப்பின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் குற்றம்சாட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக