சனி, ஆகஸ்ட் 13, 2011

சுதந்திர அணிவகுப்பிற்கு தடை:உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது – பாப்புலர் ஃப்ரண்ட்

சுதந்திர தினத்தன்று ஆண்டுதோறும் கேரள மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திவரும் அணிவகுப்பிற்கு தடை ஏற்படுத்திய அரசின் நடவடிக்கையை உறுதிச்செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது என கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முந்தைய இடதுசாரி அரசின் குறுகிய அரசியல் விருப்பங்களை முன்னிறுத்தி கடந்த ஆண்டு சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசும் அதே பாதையை பின் தொடர்ந்து அனுமதியை மறுத்துள்ளது. மாநில போலீஸ் மற்றும் அதிகார வர்க்கத்திடம் ஆழமாக வேரூன்றியுள்ள வகுப்புவாத மனோநிலைதான் சுதந்திர தின அணிவகுப்பை தடைச் செய்வதன் பின்னணியிலும் செயல்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பின் பெயரால் பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தடை விதித்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு முதல் நடத்திவரும் சுதந்திர தின அணிவகுப்பில் ஒரு இடத்தில் கூட சட்டம்-ஒழுங்கிற்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. நிலைமை இவ்வாறிருக்க இத்தடை பாரபட்சமானது மட்டுமல்ல ஜனநாயக விரோதமானதும், குடிமக்களின் சுதந்திரத்தை மறுப்பதுமாகும்.
நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட எல்லா குடிமக்களுக்கும் பிரிவினருக்கும் உரிமையுண்டு. இந்த உரிமைதான் இங்கு மறுக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட நினைவுகளை உணர்த்தி தேசத்தின் மீதான பற்றிற்கு உத்வேகம் அளித்த சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி பெரும் மக்கள் பங்களிப்பையும், வரவேற்பையும் பெற்றது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான உரிமை கிடைக்கும் வரை சட்டரீதியாகவும், ஜனநாயகரீதியாகவும் போராட்டம் தொடரும். இக்கூட்டத்திற்கு கேரள மாநில தலைவர் மெளலவி அஷ்ரஃப் தலைமை வகித்தார். பி.அப்துல்ஹமீத், டி.கெ.அப்துஸ்ஸமத், கெ.ஹெச்.நாஸர் ஆகியோர் உரையாற்றினர்.

கருத்துகள் இல்லை: