சனி, ஆகஸ்ட் 13, 2011

லிபியா:எதிர்ப்பாளர்கள் ப்ரிகா நகரத்தை கைப்பற்றினர்

அரசு எதிர்ப்பு போராட்டம் தொடரும் லிபியாவில் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் ஆதிக்கத்தில் உள்ள முக்கிய நகரமான ப்ரிகாவை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இத்தகவலை எதிர்ப்பாளர்களின் செய்தி தொடர்பாளர் மூஸா மஹ்மூத் அல் முஷ்ரபி தெரிவித்துள்ளார்.
கத்தாஃபி ஆதரவு படையினருக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஏழு எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டு நாற்பது பேருக்கு காயம் ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில் ப்ரிகாவின் மேற்கு பகுதியும் எண்ணெய் டெர்மினலும் தற்போதும் கத்தாஃபி ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதனை கைப்பற்றுவதற்காக இரு பிரிவினரும் கடுமையாக போராடுகிறார்கள்.
நேற்று முன் தினம் ப்ரிகாவின் தெற்கு பகுதியை எதிர்ப்பாளர்களின் படையினர் கைப்பற்றினர். ப்ரிகா நகரம் முழுவதுமாக கைப்பற்றினால் கத்தாஃபி அரசுக்கு பெரும் பின்னடைவாக மாறிவிடும். ஏனெனில் முக்கிய எண்ணெய் துறைமுகம் அமைந்திருப்பது ப்ரிகாவிலாகும்.
இதற்கிடையே லிபியாவில் நடக்கும்  மோதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் கவலை தெரிவித்துள்ளார். பிரச்சனையை தீர்ப்பதற்கு ராணுவ நடவடிக்கை தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் தூதர் அப்துல் இலாஹ் அல் கத்தீபுடன் அரசியல் அமைப்புகள் உடனடியாக பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும் என பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
லிபியாவில் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தான் ஒரே வழி எனவும், இக்காரியத்தில் அனைத்து அமைப்புகளும் ஒத்துழைக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னர் மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள நேட்டோ ராணுவம் நடத்தும் விமானத்தாக்குதல் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பிரதிநிதிகளான இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. தாக்குதலில் சிவிலியன்கள் கொல்லப்படும் சூழலில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கவலையை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: