புதன், செப்டம்பர் 07, 2011

ஒவ்வொரு தாலுகாவிலும் முதியோர் இல்லம்: அமைச்சர் செல்வி ராமஜெயம் அறிவிப்பு

ஒவ்வொரு தாலுகாவிலும், ஒரு முதியோர் இல்லம், ஒரு குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் கூறினார்.

சட்டசபையில், சமூக நலத்துறை மீது நடந்த விவாதம்:

ஜான் ஜேக்கப் - காங்கிரஸ்: தமிழகத்தில், குழந்தையில்லாத தம்பதிகள் ஏராளமானோர் உள்ளனர். குழந்தையில்லாதது, அவர்களிடையே பெரும் பிரச்னையை ஏற்படுத்தி, விவாகரத்து வரை சென்றுவிடுகிறது. குழந்தையில்லாதவர்கள், குழந்தையை தத்தெடுப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இதையெல்லாம் தமிழக அரசு தீர்த்து வைக்க வேண்டும். சமூக நலத்துறையில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கும் நிலை இருக்கிறது. லஞ்சம் கொடுக்காமல், அரசின் எவ்வித நலத்திட்டத்தையும் பெற முடியாத நிலை உள்ளது. லஞ்சம் கொடுக்காவிட்டால், பல்வேறு சான்றிதழ்களை கேட்டு அலைய விடுகின்றனர். லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம்: தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் உள்ள குழந்தைகளை, குழந்தையில்லாத தம்பதிகள் தத்தெடுக்கலாம். இதற்கு, உரிய வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. லஞ்சம் கேட்பவர்கள் குறித்து, குறிப்பிட்டு கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜான் ஜேக்கப்: மாவட்டங்களில், முதியோர் காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர்: ஒவ்வொரு மாவட்டம் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு தாலுகா அளவிலும் ஒரு முதியோர் இல்லம் மற்றும் ஒரு குழந்தைகள் காப்பகம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்: இந்திரா காந்தி ஓய்வூதிய திட்டத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர்: மத்திய அரசின் ஓய்வூதிய திட்டங்கள் மட்டும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் குறித்து அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஓய்வூதிய திட்டங்களுக்கு, எவ்வித அளவுகோல்களும் கிடையாது.

குணசேகரன் - இ.கம்யூ: திருமண நிதியுதவி திட்டத்தின் பலன்களைப் பெற, ஆண்டு வருமானம், 24 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த வருவாய் உச்சவரம்பை, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். சமூக நலத்துறையில், 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

source: Dinamalar

கருத்துகள் இல்லை: