செவ்வாய், அக்டோபர் 11, 2011

அஜ்மல் கஸாபின் மரணத் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அஜ்மல் கஸாபிற்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.


 ஜனவரி 31-ஆம் தேதி வரை நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், ரஞ்சனாபிரசாத் தேசாய் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுத்தொடர்பான விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கும், மஹராஷ்ட்ரா மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மரண தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்த நீதிபதிகள், “நமது நாட்டில் சட்டம்தான் முதன்மையானது. அதன்படி உரிய முழுமையான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறினர்.
மூத்த வழக்குரைஞரும் இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் நடுநிலையாளராகவும் பணியாற்றி வரும் ராஜு ராமச்சந்திரனுக்கு நீதிபதிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.

“கஸாபின் மேல்முறையீட்டு மனுவை ஒரேயடியாகத் தள்ளுபடி செய்துவிட வேண்டும். அதை விசாரணைக்கே ஏற்கக்கூடாது என்கிற மனநிலை நமது நாட்டில் பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது. ஆனாலும் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் நீங்கள் செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது” என்று ராமச்சந்திரனிடம் நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கில் மகாராஷ்டிர அரசு சார்பில் ஆஜரான முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியமும் நீதிபதிகளின் கருத்தை ஏற்றுக் கொண்டார்.

கஸாபிற்கு விசாரணை நீதிமன்றம் அளித்த மரணத் தண்டனையை கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் உறுதிச்செய்தது. இதற்கு எதிராக சிறை அதிகாரிகள் மூலமாக கஸாப் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்தார்.கடுமையான பாதுகாப்பு நிறைந்த ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கஸாப்.

கருத்துகள் இல்லை: