ஞாயிறு, அக்டோபர் 16, 2011

கடலூர் பள்ளிவாசலில் வாக்குச் சேகரித்தார் அமைச்சர்

கடலூர் நகராட்சித் தலைவர் அ.தி.மு.க. வேட்பாளர் சி.கே.சுப்பிரமணியன் உள்ளிட்ட நகராட்சி வார்டு அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, சிறப்புத்
 திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வெள்ளிக்கிழமை கடலூர் முதுநகர் பெரிய பள்ளி வாசலில் வாக்குக் கேட்டார்.


மதியம் தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்களிடம், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அமைச்சர் எம்.சி. சம்பத் கேட்டுக் கொண்டார்.


கடலூர் முதுநகர் பகுதியில் காசுக்கடை வீதி, மணிக்கூண்டு, இம்பீரியல் சாலை, கிளைவ் தெரு உள்ளிட்ட 3 வார்டுகளில் வீதிவீதீயாக திறந்த ஜீப்பில் சென்று அமைச்சர் சம்பத் வாக்குக் கேட்டார்.


சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்தது போல், உள்ளாட்சி மன்றங்களில் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் தொடர, கடலூர் நகராட்சியை முதன்மை நகராட்சியாக மாற்றியமைக்க, அ.தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களும், அடிப்படை வசதிகளும் தடையின்றி கடலூர் மக்களுக்குக் கிடைக்க அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு, அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

அமைச்சருடன் முன்னாள் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன், நகராட்சித் தலைவர் வேட்பாளர் சி.கே.சுப்பிரமணின், கடலூர் நகரச் செயலர் ஆர்.குமரன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் பலரும் கலந்து கொண்டனர்.



கடலூர் நகராட்சித் தலைவர் தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராஜா, முதுநகர் மசூதியில், தொழுகை முடித்து வெளியில் வந்த முஸ்லிம்களிடம் வாக்குச் சேகரித்தார்.


மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், கடைவீதி, மணிக்கூண்டு, பாரதி வீதி, புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்குச் சேகரித்தார்.


அவருடன் நகர தி.மு.க. செயலரும் நகராட்சித் தலைவருமான து.தங்கராசு உள்ளிட்ட  தி.மு.க.வினர் பலரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கடலூர் நகராட்சித் தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்  செ.தனசேகரன்,  புது வண்டிப்பாளையம், பழைய வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, மார்க்கெட் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.


அவருடன் நகரச் செயலர் சுப்புராயன், ஒன்றியச் செயலர் மாதவன் உள்ளிட்டோரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கடலூர் நகராட்சித் தலைவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன், கடலூர் முதுநகர் பெரிய பள்ளி வாசலில் தொழுகை முடித்து வெளிவந்த முஸ்லிம்களிடம் வாக்குச்  சேகரித்தார்.


முதுநகர் மாலுமியார்பேட்டை, கிஞ்சம்பேட்டை உள்ளிட்ட மீனவர் பகுதிகளிலும் சராங்குத் தெரு, மணிக்கூண்டு, இம்பீரியல் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் வாக்குச்  சேகரித்தார். அவருடன் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் பி.ஆர்.எஸ். வெங்கடேசன், நகரத் தலைவர் ரகுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.


நகராட்சித் தலைவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தாமரைச் செல்வன் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, கடலூர் நகர வீதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரச் செயலர் பாவாணன், பா.ம.க. நகரச் செயலர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: