புதன், அக்டோபர் 12, 2011

ஹஸாரேக்கு திக்விஜய் சிங்கின் மனம் திறந்த மடல்

ஹரியானா மாநிலம் ஹிஸார் பாராளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஹஸாரே குழுவினரின் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டின் மோசடியை வெளிச்சம்போட்டு காட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் அன்னா ஹஸாரேக்கு மனம் திறந்த மடலை எழுதியுள்ளார்.

வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறும் ஹிஸார் பாராளுமன்றத் தொகுதியில் ஹஸாரே குழுவினர் ஆதரிப்பது ஊழல்வாதிகளைத்தான் என திக்விஜய்சிங் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹரியானாவில் ஜன்ஹித் காங்கிரஸ் கட்சியின் தலைவரான பஜன்லால் கடந்த ஜூன் மாதம் மரணித்ததைத் தொடர்ந்து அவர் வெற்றிப் பெற்றிருந்த ஹிஸார் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

2009-ஆம் ஆண்டு நடந்த மக்களைவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இத்தொகுதியில் 3-வது இடத்தை பிடித்தது.

காங்கிரஸ் வேட்பாளர் ஜெயப்பிரகாசுக்கு எதிராக ஹஸாரே குழுவினர் ஆதரிப்பது மறைந்த பஜன்லாலின் மகன் குல்தீப் பிஷ்ணோவையும், இந்திய தேசிய லோக்தல் தலைவர் ஓம்ப்ரகாஷ் சவுதாலாவின் மகன் அஜய் சவுதாலாவையும் ஆகும். பிஷ்ணுவை பா.ஜ.கவும் ஆதரிக்கிறது. இந்த இரண்டு வேட்பாளர்களும் நடத்திய ஊழல், சட்டவிரோதமாக சொத்து சம்பாதித்தது தொடர்பாக சி.பி.ஐ விசாரணையை எதிர்கொள்கின்றனர். 1500 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து சவுதாலாவுக்கு உள்ளது.

காங்கிரஸை எதிர்க்கும் ஹஸாரே குழுவினர் ஊழல்வாதிகளுக்கு ஆதரவளிக்கின்றனர். மத்தியபிரதேச மாநில முதல்வராக இருக்கும் வேளையில் ஹஸாரேவை சந்திக்க ரலேகான் சித்தி கிராமத்திற்கு சென்றதையும், மத்தியபிரதேசத்தில் தனது கிராமத்தில் மழைவெள்ளம் சேகரிக்க ஹஸாரே வந்து அளித்த உதவிகளையும் திக்விஜய்சிங் தனது கடிதத்தில் நினைவுக் கூர்ந்துள்ளார்.

ஆனால், ஹஸாரேவுடன் இருப்பவர்கள் எப்பொழுதும் காங்கிரஸை எதிர்ப்பதும், ஹஸாரே மீதான நம்பிக்கையை சொந்த ஆதாயத்திற்காக உபயோகிக்கவும் செய்கின்றனர் என திக்விஜய்சிங் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: