செவ்வாய், அக்டோபர் 11, 2011

சாதி, மதம், மொழியை பயன்படுத்தி வாக்குச் சேகரித்தால் நடவடிக்கை: வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை

தேர்தல் நன்னடத்தை விதிமுறையின்படி சாதி, மதம், மொழியை பயன்படுத்தி வாக்குகள் சேகரிக்கக்கூடாது. அப்படி செயல்பட்டால் கடும்
 நடவடிக்கை எடுக்கப்படும் என சிதம்பரம் ஏ.எஸ்.பி. எம்.துரை தெரிவித்தார்.


சிதம்பரம் தெற்குவீதி ஏ.ஆர்.மஹால் மண்டபத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறை தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியர் எம்.இந்துமதி தலைமை வகித்தார். சிதம்பரம் ஏ.எஸ்.பி எம்.துரை பேசியதாவது: அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் சுவர் விளம்பரம் எழுதவோ மற்றும் போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது. வீட்டு உரிமையாளர்களிடம் அனுமதி கடிதம் பெற்று சுவர் விளம்பரம் எழுதலாம்.

அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரத்திற்கு வருவது குறித்து 7 நாள்களுக்கு முன் தெரிவிக்க வேண்டும். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்குள் செல்போன், வீடியோகிராபி செய்ய அனுமதி கிடையாது.


கோயில், மசூதி, பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் பகுதியில் பிரசாரம் செய்யக்கூடாது. போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நின்று பிரசாரம் செய்யக்கூடாது. மற்ற வேட்பாளரின் கெüரவத்தை பாதிக்கும் வகையில் தனிப்பட்ட விமர்சனம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் வழக்குப் பதிவு செய்யப்படும்.


தீபாவளி பண்டிகை வருவதால், அதனை காரணம் காட்டி அன்பளிப்புகள் வழங்கக்கூடாது. இதுகுறித்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அன்பளிப்பு வழங்குவதை கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல்நிலையத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நன்னடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டதோ, அதே விதிமுறைகளின்படி உள்ளாட்சி தேர்தலும் நடைபெறும். தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.எஸ்.பி எம்.துரை தெரிவித்தார்.


 சிதம்பரம் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பெ.மாரியப்பன், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் டி.ராஜேந்திரன், ஷேக்மொகைதீன், செந்தில்குமார், ராமானுஜம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ச.கார்த்திகேயன் (சிதம்பரம்), புகழேந்தி (புவனகிரி), சுப்பிரமணியன் (பரங்கிப்பேட்டை), ஆரோக்கியராஜ் (அண்ணாமலைநகர்) மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை: