இந்தியா பிரச்சனைகளுடன் கூடுதல் உணர்ச்சிப்பூர்வமாக நடந்துக்கொள்வதும், மேலும் மேலும் ஒரு போலீஸ் ஸ்டேட்டாகவும் மாறிக் கொண்டிருக்கிறது என எழுத்தாளர் அருந்ததிராய் கூறியுள்ளார்.
லண்டனில் ‘த இண்டிபெண்டன்’ என்ற நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: ‘ஒரு புறம் குற்றகரமான, உணர்ச்சிப்பூர்வமான ஜனநாயகநாயகம் என்ற கருத்தை நிலைநாட்டும் வேளையில்தான் நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் நிராசையை ஏற்படுத்துகின்றன. காந்திய வழியிலான போராட்ட முறைகளில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் காட்டிற்கு உள்ளே பழங்குடி கிராமத்தில் சத்தியாகிரக போராட்டத்தை நடத்த இயலுமா?பட்டினிக்கு எதிராக பட்டினி போராட்டம் நடத்த இயலுமா?
அரசு பல்வேறு நிறுவனங்களுடன் ரகசிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகுதான் மாவோயிஸ்டுகள் இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறினர். அந்த ஒப்பந்தம் நாட்டில் நதிகளையும், மலைக் குன்றுகளையும், காடுகளையும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பதாகும். பின்னர் ராணுவத்தை பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கு அனுப்பினர். அவர்கள் கிராமங்களை தீயிட்டுக் கொளுத்தி பழங்குடியினரை விரட்டியடித்தனர். பழங்குடியின கிராமங்களில் நடைபெறும் உண்மைகளை மறைக்க ஊடகங்கள் பெரும் பணியாற்றின. மாவோயிஸ்டுகளில் 45 சதவீதம்பேரும் பெண்களாவர். 99 சதவீதம் பேரும் பழங்குடியினராவர்.
வருடக்கணக்காக காடுகளில் வாழும் அவர்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகளையும், வசிப்பிடங்களையும் பாதுகாப்பதற்குத்தான் ஆயுதங்களை கையிலெடுத்தனர். அவர்கள் தற்போது தடைச் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சந்தைக்கும் வர வாய்ப்பு இல்லை. காரணம் அங்கே போலீஸும், போலீஸாருக்கு தகவல் அளிப்பவர்களும் சுற்றி வளைத்துள்ளனர். அவர்களுக்கு மருந்தோ, ரேசன் பொருட்களோ வாங்க இயலாது.
2005 ஆம் ஆண்டு ஸல்வாஜுதூம் தாக்குதல் துவங்கிய பிறகு 600 கிராமங்களிலிருந்து 3,60,000 பழங்குடியினர் ஓடிப்போயினர். 50 ஆயிரம் பேர் அகதி முகாம்களுக்கு சென்றனர். இது ஒரு இனப்படுகொலை ஆகும். இவ்வாறு அருந்ததிராய் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக