புதன், அக்டோபர் 12, 2011

அதிமுக-திமுக ரகசிய ஒப்பந்தம்

அதிமுக-திமுக ரகசிய ஒப்பந்தம் போட்டு செயல்படுகின்றனர். அதனால் தான் சிதம்பரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளர்
எளிதாக வெற்றிபெறும் வகையில் திமுகவில் டம்மி வேட்பாளர்களையும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர் என மார்க்சிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.


சிதம்பரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஹெச்.பௌஜியாபேகம் மற்றும் தேமுதிக-மார்க்சிஸ்ட் கூட்டணி வார்டு உறுப்பினர் வேட்பாளர்களை ஆதரித்து தில்லையம்மன்கோயில், தெற்குவீதி, ஓமக்குளம், மேலவீதி கஞ்சித்தொட்டி ஆகிய பகுதிகளில் எம்எல்ஏ கே.பாலகிருஷ்ணன் பேசியது:


சிதம்பரம் நகராட்சித் தலைவராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ஹெச்.பௌஜியாபேகம் கடந்த 5 ஆண்டுகளாக பல இன்னல்களைத் தாண்டி சிறப்பாக நிர்வாகத்தை நடத்தினார்.


அப்போதைய ஆளும் திமுகவினரின் தவறான வழிகாட்டுதல்களுக்கு ஒத்துழைக்காததால் தான், காரணமே இல்லாமல் நகராட்சிக் கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டு அரசுக்கு சொந்தமான பேன், மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினார்கள். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக இதுகுறித்து ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.  


தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அதிசயமாக சிதம்பரத்தில்தான் அதிமுக-திமுக ரகசிய ஒப்பந்தம் போட்டு செயல்படுகின்றனர். மக்கள் திட்டங்களை புறக்கணிப்பதில் திமுக, அதிமுக இரண்டும் ஒற்றுமையாக உள்ளன.

இதிலிருந்து உள்ளாட்சிகளில் கொள்ளை அடிப்பதற்கு திமுக, அதிமுக ஒப்பந்தம் போட்டுள்ளது தெரிகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஊழல்வாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார் கே.பாலகிருஷ்ணன்.

மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகராட்சித் தலைவர் வேட்பாளர் ஹெச்.பௌஜியாபேகம், மார்க்சிஸ்ட் வார்டு வேட்பாளர்கள் நிலவர்நிஷா, சாதிக்அலி, வி.நடராஜன், தேமுதிக வார்டு வேட்பாளர் ராமு.சுமதி மற்றும் முனைவர் தி.ராஜ்பிரவீன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை: