மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்,
சமாஜ்வாடி கட்சியும் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளன.
கிஷன்ஜி கைது செய்த பிறகு அவரை சுட்டுக் கொன்றதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது என சி.பி.ஐ கட்சியின் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறியுள்ளார். இதுத்தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி அவர் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர் சிதம்பரத்திடம் தொலைபேசி மூலமும் இக்கோரிக்கையை வைத்துள்ளார்.
தேசிய மற்றும் சர்வதேச அனைத்து சட்டங்களையும் மீறிய குற்றத்தை ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை செய்துள்ளது என கடிதத்தில் குப்தா குற்றம் சாட்டியுள்ளார். கிஷன்ஜியின் உடலை அடையாளம் காணவும், அவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவும் அரசு ஏற்பாடுச் செய்யவேண்டும் என குப்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
கிஷன்ஜியை போலி என்கவுண்டரில் கொலைச் செய்துள்ளதாக சமாஜ்வாடி கட்சி தலைவர்களில் ஒருவரான மோகன்சிங் கூறியுள்ளார். தலைவர்களை கூட்டுப் படுகொலைச் செய்துவிட்டு மாவோயிஸ்ட் கொள்கையை முடிவுக்கு கொண்டுவர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சியை பிடிக்கும் முன்பு மாவோயிஸ்டுகளுக்கு முதல்வர் மமதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாவோயிஸ்டுகள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை கொலைச்செய்ய துவங்கிய பிறகு போலீஸாரின் உதவியுடன் மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்க அவர் முயற்சி செய்துவருகிறார்.
அதேவேளையில் கிஷன்ஜியின் மரணம் போலி என்கவுண்டர் படுகொலை என்றும், அதனைக்குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் மாவோயிஸ்டுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிஷன்ஜியின் கொலையை கண்டித்து மேற்குவங்காள மாநிலத்தில் 2 நாட்கள் முழு அடைப்பிற்கும், ஒருவாரம் எதிர்ப்பை கடைப்பிடிக்கவும் மாவோயிஸ்டுகளின் மாநில கமிட்டி செய்தி தொடர்பாளர் ஆகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
கிஷன்ஜியின் கொலையை குறித்து விசாரணை நடத்தவேண்டும் என மனித உரிமை ஆர்வலரும், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவருமான சுஜாதோ பத்ரா கோரிக்கை விடுத்துள்ளார். கிஷன்ஜியின் கொலையை குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட சி.பி.ஐ(எம்.எல்) லிபரேசன் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது.
கிஷன்ஜி போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிஷன்ஜியை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை சி.ஆர்.பி.எஃப் இயக்குநர் ஜெனரல் விஜயகுமார் மறுத்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் சந்தன கடத்தல் மன்னன் என கருதப்பட்ட வீரப்பனை சுட்டுக்கொன்ற ஆபரேசன் குக்கூனுக்கு தலைமை வகித்தவர் விஜயகுமார் ஆவார். வீரப்பனும் போலி என்கவுண்டரில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
கிஷன்ஜியின் உடலை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அளிப்பதற்காக ஆந்திரபிரதேசத்திற்கு அனுப்பப்படும் என மேற்குவங்காள முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை கிஷன்ஜி கொல்லப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக